பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவர முடிவெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மற்ற மதத்தினரை பாஜக தலைவர்கள் திருமணம் செய்வது ‘லவ் ஜிகாத்’ இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் பாகல்.
மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கு ‘லவ் ஜிகாத்’ என பெயர் சூட்டிய பாஜக, அவர்களுக்கு எதிராக உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் சட்டம் கொண்டு வர தீவரமாகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்தர் பகேலிடம் ‘லவ் ஜிகாத்’ பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதல்வர் பூபேந்தர் பாகல், பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பாகல், ”பாஜகவின் மூத்த தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கூட மற்ற மதத்தினருடன் திருமண உறவு வைத்துள்ளனர். நான் பாஜக தலைவர்களிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். நீங்கள் செய்யும் திருமணங்களில் மட்டும் லவ் ஜிகாத் இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.