அஸ்ஸாமில் அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களை மூட பாஜக அரசு முடிவு

0

அஸ்ஸாமில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் மதரஸாக்களை மூட மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என மாநில அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் நடத்தி வரும் மதரஸாக்களில், தேசத்திற்கு எதிராக போதிக்கப்பட்டு வருவதாக பொய் குற்றச்சாட்டுகளை இந்துத்துவ பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக அஸ்ஸாம் மாநில பாஜக அரசு, மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் அனைத்து மதரஸாக்களையும் மூட முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிம் தெரிவித்த அஸ்ஸாம் மாநில அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா,  நமது நாடு மதச்சார்பற்ற நாடு. நமது அரசும் மதச்சார்பற்ற அரசாக உள்ளது. மதச்சார்பற்ற அரசின் பணத்தில் இருந்து செலவு செய்து மத ரீதியிலான கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது.

அஸ்ஸாமில் அரசு சார்பில் நடத்தப்படும் மதரஸாக்கள் அனைத்தும் மூடப்படும். இது தொடர்பான அரசாணை அடுத்த மாதம்  நவம்பரில் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் இயங்கும் மதரஸாக்கள் குறித்து எதுவும் பிரச்சனை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக அரசின் இந்த முடிவு குறித்து, கௌஹாத்தி பல்கலைக்கழக அரபுத் துறையின் பேராசிரியர் மிஜாஜுர் ரஹ்மான் தலுக்தர் கூறுகையில், “மதரஸாக்களில் கற்பிக்கப்படும் பாடங்கள் மாநில கல்வி வாரியத்துடன் இணக்கமாக உள்ளன.

மதரஸாக்கள் ஒன்றும் புதியதல்ல, இது 1934இல் அமைக்கப்பட்டது. மத படிப்புகளுக்கு நிதியளிப்பது அரசாங்க கடமை அல்ல என்ற அமைச்சர் கூறுகிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நிறுவனங்கள் இருப்பது போன்றுதான் மதரஸாக்களும் உள்ளன. அஸ்ஸாமின் அரசு உதவி பெறும் மதரஸாக்களில் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் பாடங்கள் மிகவும் மதச்சார்பற்ற தன்மை கொண்டவை. தற்போது அதுவும் மாநில கல்வி வாரிய விதிகளுக்கு இணங்க உள்ளது. பாஜக அரசு ஒரு மொழி மற்றும் மதத்தை மட்டும் குறிவைக்கிறது” என்று தலுக்தர் தெரிவித்தார்.

“வளைகுடா நாடுகளில் வேலை தேடும் இளைஞர்களுக்கு அரபு மொழி பயன் தரும். அரசாங்கத்தின் நடவடிக்கை அரபு இலக்கியம் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் இரண்டையும் பாதிக்கும்” என்று கம்ரூப் மாவட்ட எஸ்ஏபி உயர் மதரஸாவின் முதல்வர் அப்சர் ஹன்னான் தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சரின்  அறிவிப்புக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் கூறும்போது, ”பாஜக தலைமையிலான அரசு மதரஸாக்களை மூட முடியாது. அப்படி மூடினால், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மதரஸாக்களை திறப்போம்” என்று தெரிவித்து உள்ளார்.

Comments are closed.