பெண்ணிடம் அருவறுப்பாக நடந்துகொண்ட பாஜக மருத்துவருக்கு எய்ம்ஸில் பதவியா..?

0

மதுரையில் அமையவிருக்கும்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் குழுவை மத்திய பாஜக அரசு நேற்று வெளியிட்டது.

இக்குழுவில்  கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சையியல் துறையின் தலைவர் டாக்டர் சண்முகம் சுப்பையா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, அவரிடம் அருவறுப்பாக நடந்துகொண்ட பாஜகவின் அமைப்பான ஏபிவிபி தலைவரான சண்முகம் சுப்பையாவிற்கு, ஊக்கமளிக்கும் விதமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பதவி அளிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத பாஜக அரசுக்கு கண்டனங்கள். ஆனால், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சண்முகம் சுப்பையா என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் என்று சாடினார். பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பா.ஜ.க. கவலைப்படுவதில்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. இதிலிருந்து சண்முகம் சுப்பையாவை நீக்க வேண்டும்.

மேலும், “தமிழ்நாட்டைசேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுப்பினர் குழுவில் இடமளிக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும்” என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

“மத்திய பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பின் தமிழக தலைவராக உள்ள ஒழுக்கக் கேடான டாக்டர் சண்முகம் சுப்பையாவை மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரை நீக்கவில்லை எனில் கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் நடத்தும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற நாள் முதல், நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும், சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களை வந்து திணித்து வருகிறது. அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சண்முகம் சுப்பையாவை மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து நீக்க வேண்டும்” என பாஜக அரசுக்கு வலியுறுத்தினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து அவரிடம் ஆபாசமாக, அருவறுப்பாக நடந்துகொண்ட பாஜக-வின் சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பக்கத்து வீட்டு பெண்ணிடமே இவ்வாறு அருவறுப்பாக நடந்துகொண்ட இவர், மருத்துவ சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் எவ்வாறு நடந்துக்கொள்வார் என்பதை உணர்ந்து தமிழக அரசு இவரது நியமனத்தை ரத்து செய்ய பாஜக அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

Comments are closed.