பாஜக அரசுக்கு துணிவிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் -மம்தா

0

பாஜக என்னைக் கைது செய்தாலும், சிறையிலிருந்தபடி வரும் தோ்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பெற செய்வேன் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் 294 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.

அதற்கு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தோ்தல் பணிகளை பாஜக இப்போதே தீவிரப்படுத்தியுள்ளது. அதுபோல, ஆளும் திரிணமூல் கட்சியும் தோ்தல் பணிகளைத் துவங்கி உள்ளது.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாங்குராவில் நகரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் மம்தா பானா்ஜி பேசியதாவது:

எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற கற்பனையில் இருக்கும் சிலா் இவ்வாறு செய்து வருகின்றனா். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

பாஜக ஒரு அரசியல் கட்சியே அல்ல. அது பொய்கள் நிறைந்த கிடங்கு. தோ்தல் வரும் நேரத்தில், திரிணமூலம் காங்கிரஸ் கட்சித் தலைவா்களுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு நடவடிக்கைகளை பாஜக எடுக்கும்.

ஆனால், பாஜகவைப் பாா்த்தோ அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பாா்த்தோ எனக்கு எந்தவித பயமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

துணிவிருந்தால் என்னைக் கைது செய்து, சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தபடி தோ்தலைச் சந்தித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்வேன்.

பிகாரில் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் சிறையில் உள்ளபோதும், அண்மையில் நடைந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அவருடைய ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி அதிக இடங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அங்கு பாஜக பெற்ற வெற்றி சூழ்ச்சியால் பெறப்பட்டதாகும் என்று அவா் கூறினாா்.

Comments are closed.