Covid19- வெகுஜன ஊடகங்களின் முஸ்லிம் வெறுப்பு

0
மார்ச 22 ஊரடங்கு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் பற்றிய தீவிரம் தேசம் முழுவதும் தொற்றிக் கொண்டது. திடீரென அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கினால் இந்தியாவில் உள்ள அடித்தட்டு, ஏழை, தினக் கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் நிற்கதியில் நின்றதை பார்த்தோம். ஆயிரம் கி.மீ. வெறும் காலோடு நடந்ததும், சோற்று பொட்டலங்களை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறியதும், வீடுகளை சென்று சேர்வதற்கு முன் மரணித்ததும் பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கொடூரத்தினை நினைவுபடுத்துவதாக வரலாற்றாய்வாளர்கள் ஒப்பிடுகிறார்கள்.
அரசின் நிர்வாக அலட்சியங்களை கேள்வி எழுப்பியதும்தான் தாமதம். சீனாவிலிருந்து புறப்பட்ட வைரஸ் முஸ்லிம் வைரஸாக உருமாறிப் போனது. டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்தினருக்கு எதிராகவும் ஏராளமான திரிக்கப்பட்ட போலிச் செய்திகள் பரவத் தொடங்கின. பா.ஜ.க.வின் தகவல் தொழில் நுட்ப அணியும், அதன் உயர் மட்ட தலைவர்களும் திட்டமிட்டே இந்த வெறுப்பை பரப்பினார்கள். முஸ்லிம்கள் எச்சில் துப்புகிறார்கள், பாத்திரங்களை நக்குகிறார்கள், பழங்களில் எச்சிலை தடவுகிறார்கள், பள்ளிவாசலில் பதுங்கி இருக்கிறார்கள் என்ற போலிச் செய்திகளையும், பழைய காணொளிகளையும் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
சமூக ஊடகங்களில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம் வெகுஜன ஊடகங்களுக்கு பரவியது. சில சேனல்களும் பத்திரிகைகளும் சங்பரிவாரின் முழு நேர ஊழியர்கள் போல் நடந்து கொண்டனர்.
முன்னணி ஆங்கில காட்சி ஊடங்கள் “கொரோனா ஜிஹாத்”, “கொரோனாவின் கேந்திரம் நிஜாமுதீன்”, ” பயோ ஜிஹாத்” மற்றும் “கொரானோ பரப்பிகள்” என்றும் தலைப்பிட்டு பிரைம் டைம் விவாதங்களை நடத்தின. ரிபப்ளிக் டிவி, சுதர்ஷன் டிவி, டைம்ஸ் நவ் , இந்தியா டிவி, ஜீ நியூஸ் போன்ற ஊடகங்கள் அன்றைய ஊடக விவாதங்களில் ஊடக அறத்தை காக்க வந்தவர்கள் போலவும், கொரோனாவிற்கு எதிரான போரில் முன்னணி வீரர்கள் போலவும் கேமராவின் முன் நின்று காட்டுக் கூச்சல் போட்டனர். ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களாக மதிக்கும் தேசத்தில் வெகுஜன முன்னணி ஊடகங்கள் தங்களது சுய லாபத்திற்காக ஒரு சமூகத்திற்கு எதிரான வெறுப்பை கக்குவது எப்படி ஊடக தர்மம் ஆகும்?.
சமூக வலைதள பதிவுகளுக்கும், முன்னணி தேசிய செய்தி நிறுவனங்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லாத காலத்தில் இருக்கிறோம். ஏப்ரல் 7ம் தேதி ANI செய்தி நிறுவனத்தின் உ.பி. மாநில அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நொய்டாவில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களோடு  தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தியிருப்பதாகவும், இதனை சங்கல்ப் ஷர்மா எனும் காவல்துறை துணை ஆணையர் கூறியதாக ANI சில கோப்பு படங்களோடு செய்தியிட்டது.  இந்த செய்தியை ANI செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் அமிஷ் தேவ்கான் உள்ளிட்டோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். ANI ன் இந்த பதிவை நொய்டாவின் காவல் துறை துணை ஆணையர் (DCP) மறுத்துள்ளார். ANI யின் செய்தியின் பின்னூட்டத்தில்  “யாருக்கெல்லாம் கொரோனா தொற்று பாசிடிவ் என வந்ததோ, அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி உள்ளோம். எங்கேயும் அவர்கள் தப்லீக் ஜமாத் என குறிப்பிடவில்லை. நீங்கள் தவறான மற்றும் போலி செய்தியை பரப்பியுள்ளீர்கள் ” என முகத்தில் அறைந்தது போல பதில் அளித்தார்.
இதற்கு முன்பு இதே ANI நிறுவனம் பாகிஸ்தான் கராச்சியில் கொரோனா காரணமாக ஊரடங்கில் அமலில் இருக்கும் நிலையில் இந்துக்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. இதனை பாகிஸ்தான் பத்திரிகைகளும், சம்பந்தப்பட்ட ஊரின் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் இந்து சமூகத் தலைவரான சந்தோஷ் மஹாராஜ் ஆகியோர் மறுத்தனர். இது ANI செய்தி நிறுவனம் திட்டமிட்டு திரித்து பரப்பிய செய்தி என்றும் குறிப்பிட்டனர்.
முன்னணி ஊடகங்களான இந்தியா டுடே, எகனாமிக் டைம்ஸ் போன்றவை இந்தியாவில் தப்லீக் ஜமாத்தினர் மூலமாகத்தான் அதிகமான கொரோனா பாதிப்புகள் பரவியுள்ளதாக செய்திகளை வெளியிட்டன. எகானமிக் டைம்ஸ் பத்திரிகை ஒருபடி மேலே சென்று இரண்டு நாட்களில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 95% தப்லீக் ஜமாத்தினர் என்றது. பெரும்பாலான ஊடகங்கள் இத்தனை பேருக்கு சோதனை செய்யப்பட்டது, இத்தனை பேருக்கு பாசிடிவ்,  இத்தனை பேருக்கு நெகடிவ் என முழுமையான புள்ளி விபரங்களை தராமல் வெறுமென பாசிடிவ் வழக்குகளை மட்டும் வைத்து எண்களில் வித்தைகளை காட்டி ஒரு அபாயத்தை ஏற்படுத்த முனைந்தன.
சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் சோனி கொரோனா பரிசோதனையில் உள்ள  தப்லீக் ஜமாத்தினரோடு தொடர்புடைய சிறுவன் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், எச்சில் துப்புவதாகவும் கூறினார். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் Zee -MP & சத்தீஸ்கர் சேனல்கள் வெளியிட்டன. பின்னர் இதனை ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையும், சத்தீஸ்கர் மாநில மக்கள் தொடர்பு இயக்குனரகமும் இது தவறான செய்தி எனவும் இத்தகைய போலிச் செய்திகளை பரப்ப வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்தன.
இந்தி நாளிதழ்கள் அமர் உஜாலா, பத்திரிகா மற்றும் நியூஸ் ஒன் இந்தியா இணையதள செய்தி நிறுவனம் உள்ளிட்டவை  ஏப்ரல் 4ம் தேதி தங்களின் ஃபேஸ்புக் பக்கத்திலும், இணையதளத்திலும் ஒரு செய்தியை வெளியிட்டன. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சஹரான்பூர் கொரோனோ தனிமை மையத்தில் பரிசோதனையில் இருந்த தப்லீக் ஜமாத்தினர் அசைவ உணவு கேட்டு அடம்பிடித்ததாகவும், திறந்த வெளியில் மருத்துவமனை வளாகத்தில் மலம் கழித்ததாகவும் அதில் சொல்லப்பட்டது. இதனை கிட்டத்தட்ட 5000 பேர் லைக் செய்துள்ளனர். இந்த செய்தி பொய் என்று சஹரான்பூர் காவல்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. சம்பந்தப்பட்ட செய்தி வெளியிட்ட பத்திரிகைகளின் கணக்கை குறிப்பிட்டு இது தவறான செய்தி எனவும், தப்லீக் ஜமாத்தினர் மீது களங்கம் கற்பிக்க திரித்து பரப்பப்பட்ட செய்தி எனவும் காவல்துறை விளக்கம் அளித்தது.
இதுபோன்ற தொடர்ச்சியான இஸ்லாமிய வெறுப்பில் வெகுஜன ஊடகங்கள் ஈடுபட்டு வருவது வெறுமென தற்செயலான போக்கு அல்ல. ஊடகத்தின் அறம் என்பது இரு தரப்பு நியாயங்கள், உண்மையை பேசுவதுதான். குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து  கட்டமைக்கப்படும் போலிச் செய்திகளை வெகுஜன ஊடகங்களை வெளியிடுவதின் மூலம் முஸ்லிம் வெறுப்பு என்பது பேசு பொருளாக மட்டும் நின்று விடாமல் அடிமட்ட அளவில் பரவி அது மத பிளவுகளுக்கும், கும்பல் தாக்குதலுக்கும் வழிவகுக்கிறது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த மீனவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களோடு ஊரின் எல்லையில் தடுத்து நிறுத்தி கொரோனாவை பரப்புபவர்கள் என்று குற்றம் சுமத்தி தாக்கியதும் அதே கர்நாடகாவில் ஸ்வராஜ் அபியான் தன்னார்வலர் தப்ரேஸ் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கும் போது “முஸ்லிம்கள் இந்துக்களுக்கு உணவு வழங்க தேவையில்லை; உங்கள் மூலம்தான் கொரோனா பரவுகிறது” என தாக்குதல் நடத்தியதும் ஊடகங்களின் இஸ்லாமிய வெறுப்பினால் நிகழ்ந்தவைதான்.
ஒரு மாநிலத்தோடு இவை நின்று விட வில்லை. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள குஜ்ஜார் இன முஸ்லிம் பால் வியாபாரிகள் பால் விற்கக் கூடாது என மிரட்டப்பட்டுள்ளனர். உத்தர்காண்டில் “ஜாவித் பாய் இங்கே இனிமேல் கடை போடாதீர்கள்; உங்களை போன்றோரிடமிருந்துதான் கொரானோ பரவுகிறது” என சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் ஊடகங்களினால் பரப்பப்பட்ட ஒட்டுமொத்த இஸ்லாமிய வெறுப்பின் விளைவுகள். முன்னணி ஊடகங்களும் அறத்தை தூக்கி எறிந்து விட்டு இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவது, தேசம் சந்திக்கும் கொரோனாவை விட மோசமான பேரிடர்.
– அகமது யஹ்யா அய்யாஷ்

Comments are closed.