உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம்: மும்பை வீதியில் இறங்கிய தொழிலாளர்கள்

0
வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பலர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மும்பை பாந்த்ராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றும் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது, எனவே தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வேண்டும் என்றும் கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கரோனா பரவும் இந்த சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் பாந்த்ரா நோக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்றன என்றும் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும். மாறாக பிரதமர் மோடி வெற்று அறிவிப்புகளை கூறுவதால் இது போன்ற நிலையிலும் போராட்டங்கள் அதிகரிக்கின்றன என்பது பொருளாதார நிபுணர்களின் கூற்றாக இருக்கிறது.

Comments are closed.