மீண்டும் ஒரு முறை பிரதமர் மோடி மக்களை ஏமாற்றிவிட்டார்!

0

மீண்டும் ஒரு முறை பிரதமர் மோடி, 130 கோடி இந்திய மக்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டார். இம்முறை ஏமாற்றத்தால் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றார்கள் என்பதற்கு மகாராஷ்டிரா பாந்த்ராவில் கூடிய மக்களின் கூட்டமே சாட்சி.

முதல் முறை ஊடகம் முன் மக்களுக்கு காட்சி தந்த மோடி கைத்தட்ட சொன்னார். சங்கிகளும், சில மக்களும் உற்சாகத்தோடு செய்தனர். அன்று அடையாள ஊரடங்கு அறிவித்த நாள். மோடியின் அறிவிப்பை தொடர்ந்து அதனை விழாகோலமாக்கினர். அடுத்த முறை மக்களுக்கு காட்சி தந்த மோடி விளக்கேற்றுங்கள் என்றார். அதற்கும் தலையாட்டினர் சிலர். அதற்கு வான சாத்திரங்களோடு வியாக்கியானங்கள் வழங்கினர் சங்கிகள். பட்டாசு வெடித்து கொரோனாவை துரத்த சிலர் முற்பட்டனர்.

மீண்டும் ஏப்ரல் 14 அன்று ஊடகம் முன் தோன்றிய போது, 130 கோடி மக்களும் நிச்சயமாக மக்களின் துயர் துடைக்க ஏதாவது அறிவிப்புகள் செய்வார் என்று எதிர்பார்த்தார்கள். 7 அறிவுரைகளை மட்டும் வழங்கினார். நல்லவேளை மக்களுக்கு கைத்தட்ட, விளகேற்ற வேலைகள் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால் சங்கிகள் பாவம். அதற்கு வேறு வியாக்கியனங்களும், விளக்கங்களும் கொடுக்க வேண்டிய கடுமையான பணி அவர்களுக்கு இருந்திருக்கும்.
நாங்கள் அறிவுரைகளை கூறுவோமே தவிர எந்த திட்டங்களையும் செய்ய மாட்டோம் என்று உறுதியாக இருப்பதை மோடியின் பேச்சு தெளிவுபடுத்தியுள்ளது. நீங்கள் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று கூறுகிறார்களே தவிர நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று கூறுவதற்கு தயாராக இல்லை மத்திய பாஜக அரசு. அதனால் பாந்த்ரா ரயில் நிலையத்தில் கோபத்தோடு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் (ஏப்ரல் 14) ஈடுபட்டார்கள். குஜராத் மாநிலம் சூரத்தில் மக்கள் கூடினர். ஊரடங்கை பிரதமர் நீடித்து அறிவித்த நிலையில் அவர்கள் வீதிக்கு வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இந்தியாவின் சூழல், மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம் எதனையும் கணக்கில் கொள்ளாமலும், எந்த வித திட்டமிடலுமின்றியும், எந்த மாநிலத்தின் முதல்வர்களுடன் கலந்தாலோசிக்காமலும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மத்திய அரசு கடும் தோல்வியை சந்தித்தது.

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 4.14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் மூலம் தெரிவித்திருந்தது. ஆனால் உண்மையில் 12 கோடி முதல் 20 கோடி புலம்பெயர் தொழிலாளர் இருப்பதாக கூறப்படுகிறது. நம் நாட்டில் மக்கள் தொகையில் 45 சதவிகிதத்தினர் அன்றாடங்காய்ச்சிகள். 30 சதவிகிதத்திற்கும் மேல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளனர். வீடற்று வீதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணக்கிலாடங்காதது. இவர்களை பற்றி கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவு அரசின் ஊரடங்கு உத்தரவு.

இதனால் வேலையிழந்த மக்கள் ஏழை எளிய மக்கள் பசியிலும் பட்டினியிலும் நாட்களை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பசியால் புல்லை தின்ற சம்பவமும் பீகாரில் தவலைகளை தின்ற நிகழ்வும் நடந்துள்ளது. வாழ்வின் அடுத்த நிமிடத்தை எவ்வாறு கழிப்பது என்று வழி தெரியாமல் சிலர் தற்கொலையும் செய்து கொண்டனர். பலர் நூற்றுக்கணக்கான மைல்களை குடும்பம், குழந்தைகள் சகிதம் கடும் வெயிலில் நடந்த கொடுமையும் நமது நாட்டில் நடந்தது கொடுமையின் உச்சம். ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு தேவையான உணவை அரசு உறுதி செய்யவேண்டும். அவர்களுக்கு தேவையான குறைந்த பட்ச தொகையையாவது வழங்க வேண்டும். எதுவும் செய்யாமல் கைத்தட்டுங்கள் என்றும் வீட்டில் அடுப்பெரிக்கவே எண்ணை இல்லாத மக்களிடம் 9 நிமிடம் விளக்கேற்றுங்கள் என்று கூறுவதும் மக்களை கேலி செய்வதாகும்.

மத்திய அரசு அறிவித்த கொரோனா நிவாரண தொகை மிகவும் குறைவானது. வெறும் 1.7 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி)யில் 1 சதவிகம் கூட கிடையாது, வெறும் ௦.83 சதவிகிதம் மட்டுமே. அமெரிக்கா தன் நாட்டின் ஜி.டி.பி. யில் 10 சதவிகிதம் அறிவித்துள்ளது. ஜெர்மன் மற்றும் பிரிட்டன் நாடுகள் ஜி.டி.பி யில் 20% தொகையை நிவாரணம் அறிவித்துள்ளன.

உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அபானம் மார்ச் மாதம் 11 அன்று ‘இது உலகம் முழுவதும் பரவும் நோய் தொற்று’ என்று கொரனாவை எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை சரியாக எடுத்துக் கொள்ளாமல் மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா நோய் தோற்றை அவசர நிலைப் பிரச்சனையாக கருதவியலாது என்று கூறியது. அந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் நோய் பரவலை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம். அதனை செய்யாமல் தோல்வியடைந்த மத்திய அரசு தன் தோல்வியை மறைக்க தப்லீக் ஜமாத்தை பலிக்கடாவாக ஆக்கியிருக்கின்றது.

தற்போதும் போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தில் 21 நாட்கள் ஊரடங்கு செயல்படுத்திய சமயத்திலும் கூட வெறும் இரண்டரை லட்சம் பேருக்குதான் இதுவரை பரிசோதனை செய்துள்ளது. நமது நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப போதுமான பரிசோதனை மையங்கள் இல்லை. அதற்கான சாதனங்களும் மிக குறைவாக இருக்கும் நிலையில் அது குறித்து அதிக கவனத்தை மத்திய அரசு செலுத்தவில்லை.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வெறும் 500 ரூபாயை அறிவித்துவிட்டு தன் கடமை முடிந்துவிட்டதாக கருதுவது மக்களை முட்டாளாக்கும் செயல். அந்த தொகையை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பம் நடத்தமுடியும் என்பதற்கு மத்திய அரசு என்ன பதில் வைத்திருக்கின்றது என்பதையும் மோடி விளக்க வேண்டும்.

மாநில அரசுகள் மூலம் மட்டுமே நேரடியாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க முடியும். ஆனால் மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்று மத்திய தொகுப்பிலிருந்து மாநிலத்திற்கு நிவராணம் தொகை வழங்குவதிலும் கஞ்சத்தனம் காட்டுகிறது மத்திய அரசு. தமிழ்நாடு முதல்வர் 12,000 கோடி கேட்டு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் வெறும் 500 கோடி மட்டமே வழங்கி அமைதி காப்பது சரியான அணுகு முறை கிடையாது.

மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் வழங்காமல் தொடர்ந்து அறிவுரைகளை மட்டும் வழங்கிவருவது அர்த்தமற்றது. உணவில்லாமல் குடும்பத்துடன் தவித்துக் கொண்டிருக்கும் போது மோடி அறிவுரை கூறுவதையும், கைத்தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று கூறுவதையும் மக்கள் ரசிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் வீதிக்கு வந்து அரசின் அலட்சிய போக்கை கண்டித்து போராட துணிந்திருக்கிறார்கள். மோடி அவர்களே பேசிக் கொண்டிருக்காதீர்கள் செயல்படுங்கள்.

M. முகம்மது சேக் அன்சாரி,
மாநில தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு.

Comments are closed.