மோடியின் கனவு திட்டத்தை நிறைவேற்றிய குடியரசு தலைவர்

0

குஜராத் பயங்கரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்தாக, குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா காந்திநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மசோதா முன்னதாக குஜராத் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா என்று வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பிரதமர், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் 2004 முதல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவரால் நிராகரிக்கப்பட்ட மசோதாவாகும்.

இதனையடுத்து 2015இல் இந்த சட்டம் குஜராத் பயங்கரவாத மற்றும் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா என்று மறு பெயரிடப்பட்டு , தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அதையே நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான ஆதாரமாக சமர்ப்பிக்கும் சர்ச்சைக்குரிய பிரிவு தக்கவைக்கப்பட்டது.

கூலிப்படை கொலை, போதை மருந்து கடத்தல், விற்பனை, ஆட்கடத்தல் மிரட்டல் ஆகிய குற்றங்களுக்கு எதிராக இந்த மசோதா மிக முக்கியமானது என்று ஜடேஜா தெரிவித்தார்.

மோடியின் கனவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த புதிய மசோதாவின் முக்கிய பிரிவு என்னவெனில் ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களையும் சட்டப்பூர்வ ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியும் என்பதே. மேலும் இந்த மசோதா, சிறப்பு நீதிமன்றம் உருவாக்கத்திற்கும் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் வழிவகை செய்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் மூலம் சேர்த்த சொத்துக்களை முடக்க முடியும். சொத்துக்களை பிறருக்கு மாற்றுவதையும் தடுக்க முடியும்.

மேலும் போலீஸ் அதிகாரி முன் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களும் ஆதாரமாக, சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது” என்று கூறினார் ஜடேஜா.

Comments are closed.