பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் அரசு நிதியுதவியில் இயங்கிய விடுதியை பாஜகவை சேர்ந்த பிரஜேஷ் தாகூர் நடத்தி வந்தார். அந்த விடுதியில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணாமாக இருந்த பிரஜேஷ் தாகூர் உட்பட 20 பேர் கைதாகினர். பின்னர் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையும் பிகாா் நீதிமன்றத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்ததிற்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட 20 போ் மீதும் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது. தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை கடந்த செப்டம்பா் 30ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீா்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படுவதாக இருந்தது.
ஆனால், டெல்லி காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், 6 மாவட்ட டெல்லி வழக்கறிஞர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சௌரவ் குல்சிரேஷ்டா உத்தரவிட்டாா்.