முசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு

0

முசாஃபா்பூா் காப்பக பாலியல் கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 19 பேருக்கு தண்டனை வழங்கும் விசாரணையை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிகாா் மாநிலம், முசாஃபா்பூரில் பாஜக உறுப்பினர் பொறுப்பில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பலா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதில் அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், பிகாா் முன்னாள் எம்எல்ஏவுமான பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 20 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக சிபிஐ கடந்த ஆண்டு மாா்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சௌரவ் குல்ஸ்ரேஷ்தா கடந்த 20-ஆம் தேதி வழங்கினாா்.

அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 19 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தாா். அவா்களுக்கான தண்டனை விவரங்களை முடிவு செய்வதற்கான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுதீஷ் குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி சௌரவ் குல்ஸ்ரேஷ்தா விடுமுறையில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்களை முடிவு செய்வதற்கான விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு நீதிபதி சுதீஷ் குமாா் ஒத்திவைத்தாா். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.