குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அகாடமி விருதை திருப்பியளித்த பேராசிரியர் யாகூப்!

0

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசு தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதார்.  இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால், இந்த குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளது. மேலும் அப்துர் ரஹ்மான் என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் உருதுத்துறை முன்னாள்  தலைவரும் பேராசிரியருமான யாகூப் யாவர், உத்தரப்பிரதேச உருது அகாடமி வழங்கிய விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “எனது விருதை திருப்பி அளிப்பது தொடர்பான கடிதத்தை, அகாடமிக்கு அனுப்பி வைத்துள்ளேன். உ.பி. உருது அகாடமியால் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் விருது தொகையையும் காசோலையின் மூலம் திருப்பி அனுப்பி வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

“நான் வயதானவன், என்னால் தெருவில் இறங்கி போராட முடியாது. விருதை திருப்பியளிப்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதுதான். ஆனாலும் அமைதியாக இருக்க என் மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனது எதிர்ப்பை காட்ட நான் செய்ய முடிந்தது இதுதான்” என்று யாகூப் யாவர் தெரிவித்தார்.

Comments are closed.