கேரளாவில் என்பிஆா் அமல்படுத்தப்போவதில்லை: மாநில அமைச்சரவை முடிவு

0

கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம், திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை (நேற்று) நடைபெற்றது. பின்னா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கு உதவும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அந்த அச்சத்தை போக்குவதுடன், சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய வேண்டிய அரசியல் சாசன பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.

என்பிஆா் பணிகளை மேற்கொண்டால், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காவல்துறையினா் அறிக்கை அளித்துள்ளனா். மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியுடன், என்பிஆரும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி பாதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா்களும் மாநில அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒத்துழைக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தலைமை பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு தகவல் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீா்மானத்திற்கு ஆளும் இடதுசாரி முன்னணி உறுப்பினா்கள் மட்டுமன்றி, காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி உறுப்பினா்களும் ஆதரவளித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறிய கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் “இந்த விவகாரத்தில்,கேரள அரசின் முடிவு திருப்தியளிக்கவில்லை. எனது ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து” என்றார்.

Comments are closed.