“பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்”- மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா கருத்துக்கு எதிர்ப்பு!

0

பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஓம் பிர்லா. “மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வி நெறிகளை நாடெங்கும் பரவச் செய்தது பிராமண சமுதாயம் தான்.

பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர்” என்றார்.

இவரின் இந்த கருத்துக்கு குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிங்னேஷ் மேவானி எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா ஸ்ரீவாத்சவா கூறுகையில், பிர்லா பேச்சு மிகத் தவறானது. ஒரு சமூகத்தை உயர்த்திப் பேசுவதன் மூலம் அவர் மற்ற சமூகங்களை தாழ்த்தியுள்ளார். இது அரசியல் சாசனச் சட்டம் 14வது பிரிவின் படி தண்டனைக்குரியது. ஜாதிய துவேஷத்தை பரப்பியுள்ளார் ஓம் பிர்லா. இதுதொடர்பாக அவர் மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கவிதா.

Comments are closed.