“ஒரு மருத்துவராக கடமையை செய்தது குற்றமா?”- கண்ணீர் வடிக்கும் டாக்டர் கஃபீல் கான்

0

2017ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசம் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் பலியான சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது.

இந்தச் சம்பவத்துக்கு டாக்டர் கஃபீல் கான் தான் காரணம் என்று கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து, சிறையில் தள்ளியது உ.பி அரசு. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, `கஃபீல் கான் குற்றமற்றவர்’ எனத் தீர்ப்பு கூறியது. இதையடுத்து, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் கஃபீல் கான். தற்போது உத்தரப்பிரதேச அரசாங்கம், மீண்டும் அவர்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு 69 லட்சம் ரூபாய் பாக்கி இருந்ததால், அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்திவிட்டது. நான்கு மாதங்களாக 16 முறை இதுபற்றி நினைவூட்டியும், மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதன்பிறகே 70 குழந்தைகள் இறந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தின்போது சொந்தப் பணத்தில் ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த டாக்டர் கஃபீல் கான் என்பவரை பணிநீக்கம் செய்தது நிர்வாகம்.

தொடர்ந்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘அன்று பொறுப்பு மருத்துவராக இருந்திருக்க வேண்டிய கஃபீல் கான், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. முறையான அனுமதியின்றி விடுப்பில் சென்றிருக்கிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறைகுறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் அளிக்கவில்லை’ எனக் குறிப்பிட்டது.

இதற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்த கஃபில் கான், ‘மேல் அதிகாரிகளின் நிர்வாகக் கோளாறே இந்த நிகழ்வுக்குக் காரணம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்க, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கடந்த மாதம் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான், அரசுக்கு எதிரான கருத்துகளை ஊடகங்களில் சொல்வது, தற்காலிகப் பணியிலிருந்து நிறுத்திவைக்கப் பட்டுள்ள நிலையில் பாராய்ச் (BAHARAICH) மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவம் பார்த்து இடையூறு ஏற்படுத்தியது, குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையை உருவாக்கியது என மூன்று குற்றச்சாட்டுகளை அவர்மீது வைத்துள்ளது அரசு தரப்பு. இதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

டாக்டர் கஃபீல் கானிடம் பேசினோம். “நான் குற்றமற்றவன் எனத் தீர்ப்பு வந்ததிலிருந்து, நான்கு நாள்கள் மக்களின் கவனம் என்மீது திரும்பியது. ‘டாக்டர் கஃபீல் கான் குற்றமற்றவர் என்றால், யார் உண்மையான குற்றவாளி?’ என்று மக்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு பதிலளிக்க பயந்த உத்தரப்பிரதேச அரசாங்கம், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மீண்டும் என்மீது பழிசுமத்தி பணியிடை நீக்கம் செய்துள்ளது. சட்டத்தை நம்பும் நான், எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கான நியாயம் கிடைக்கும் வரை போராடு வேன். உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் என் குடும்பம் மிகவும் பாதித்துள்ளது. நான் சிறையில் இருந்தபோது, எல்லோரும் என்னைக் குற்றவாளியாகவே பார்த்தனர்.

என் குடும்பத்தினரிடம் பேசக்கூட பயந்தனர். நாங்கள் தீண்டத்தகாதவர்களாக பாவிக்கப்பட்டோம். இரண்டு ஆண்டுகளாக எனக்கு சம்பளம் வரவில்லை. நகைகளை அடமானம் வைத்து நாள்களை நகர்த்தினோம். நான் மனம் தளரவில்லை. சிறையில் இருந்த ஒன்பது மாதங்களில் நிறைய புத்தகங்கள் படித்தேன். `ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் கடவுள் என்னை இவ்வாறு சோதிக்கிறார். நமக்காக அவர் சிறந்த திட்டம் ஒன்றை வைத்திருப்பார்’ என நினைத்துக்கொண்டேன்.

நான் ஏற்கெனவே 73 மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளேன். பாராய்ச் மருத்துவமனையில் மூளைவீக்கம் நோயால் குழந்தைகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகச் சென்றேன். ஒரு மருத்துவராக அது என் கடமை. அதை இப்போது குற்றச் செயலாக மாற்றுகிறது இந்த அரசு. கடமையைச் செய்த எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் பணிக்கான தடையை நீக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்!

-vikatan

Comments are closed.