ஏப்ரல் 16ம் தேதி சாதுக்கள் கல்பவிருக்ஷ கிரி மஹாராஜ் (70) , சுசில் கிரி மஹாராஜ் (35) மற்றும் அவர்களது கார் ஓட்டுனர் நீலேஸ் டெல்கடே ஆகியோர் மஹாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள கட்சின்ச்சாலே எனும் கிராமத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்களால் ‘குழந்தை கடத்தல்காரர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நிலையில் காவல்துறை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் படுகொலை தொடர்பான 70நொடிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்து சாதுக்களை முஸ்லிம்கள்தான் கும்பல் படுகொலை செய்தார்கள் என சமூக வலைதளங்களில் பா.ஜ.க. வின் இணையதள ட்ராலர்கள் ஹேஷ்டேக்குகளோடு பரப்பினர். இதனை மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மறுத்துள்ளார்.
பல்காரில் என்ன நடந்தது..?
கொரோனா நோய் பரவலின் காரணமாக தேசம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் கந்தவாலியில் ஆசிரமம் நடத்தி வரும் சாதுக்கள் கல்பவிருக்ஷ கிரி மஹாராஜ் மற்றும் சுசில் கிரி மஹாராஜ் ஆகிய இருவரும் மரணம் எய்திய தங்களது குருவான ஸ்ரீ மஹந்த் கிரி என்பவரது இறுதி ஊர்வலத்தில் பங்கெடுப்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு ஒரு வாடகை கார் எடுத்து பயணித்தனர். அந்த காரின் ஓட்டுநர் நீலேஸ் டெல்கடே, அனுமதி பெறாத எந்த வாகனமும் சாலையில் செல்ல முடியாது என்கிற நிலையில் மஹாராஷ்டிரா-குஜராத் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது அங்கே காவல்துறையின் சோதனையில் அவர்கள் திருப்ப அனுப்பப்படவே காடுகள் வழியே பயணிக்க முயற்சித்தனர். சில இடங்களில் வனத்துறையினரும் அனுமதி மறுத்துள்ளனர். பல்காரி மாவட்டம் கட்சின்ச்சாலே எனும் கிராமத்தின் வழியே பயணித்த போதுதான் கொடூர கும்பல் படுகொலை நடந்துள்ளது.
பல்காரி யூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நாகர்ஹவேலிக்கு மிக சமீபத்தில் உள்ள மாவட்டம். சம்பவம் நடைபெற்ற கட்சின்ச்சாலே கிராமம் 93 விழுக்காடு ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் கிராமம். இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் CPM கட்சியை சார்ந்தவர். ஊரடங்கு நேரத்தில் கார் ஒன்று கிராமத்திற்கு வருவதை கண்ட பொதுமக்கள் அவர்கள் குழந்தை கடத்தல்காரர்களாகவோ அல்லது மனித உறுப்புகளை திருடும் நபர்களாகவோ இருக்கக் கூடும் என சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை தடுத்து நிறுத்தினர். வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக பல போலி செய்திகள் பரவியதுதான் அந்த மக்களை பீதியடைச் செய்துள்ளது.
காரை தடுத்து நிறுத்திய விபரம் கிராமம் முழுக்க பரவவே 400க்கும் அதிகமான பொதுமக்கள் கற்கள், கம்புகள், ஈட்டிகளோடு திரண்டனர். மூவரையும் வாகனத்தில் இருந்து இறக்கி கடுமையாக தாக்கினர். அருகிலிருக்கும் காசா காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் திரண்டிருந்த கும்பலிடமிருந்து சாதுக்களை இரத்த வெள்ளத்தில் மீட்டு காவல்துறை வாகனங்களில் ஏற்றினர். இதை பார்த்துக் கொண்டிருந்த கும்பல் காவல்துறையையும் தாக்கி அவர்களை வாகனங்களில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இரண்டு சாதுக்கள் உட்பட அவரது ஓட்டுநரும் அதில் கொல்லப்பட்டனர்.
இது குறித்த 70நொடிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பா.ஜ.க.வின் உயர் மட்ட தலைவர்கள், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் சுனில் தியோதர், மஹாராஷ்டிரா பா.ஜ.க. செய்தி தொடர்பாளர், சுதர்ஸன் டிவி நிர்வாக ஆசிரியர் என வலது சாரி சிந்தனை கொண்டவர்கள், அந்த காணொளியை திரித்து, இதனை முஸ்லிம்கள் செய்தனர் என பரப்பினர். ‘அக்லாக்களுக்கு அரசு வேலை, சாதுக்களுக்கு இரட்டை நீதியா?’ என்று பலர் வெறுப்பை கக்கினர். ரிபப்ளிக் டிவி, சுதர்ஷன் டிவி போன்ற காட்சி ஊடகங்கள் இதற்கு காங்கிரசு பொறுப்பேற்க வேண்டும், சோனியா கண்டிக்காது ஏன்.? என மதரீதியாக திசை திருப்பினர்.
இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 101 கிராமத்தினர், 9 சிறார்கள் ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். சிறார்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் அலட்சியத்தோடு செயல்பட்டு கடமையை மேற்கொள்ள தவறிய இரண்டு காவல்துறையினர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது டிவிட்டர் பக்கத்தில் பல்கார் கும்பல் படுகொலையில் தொடர்புடைய 101 நபர்களின் பெயர்களையும் வெளியிட்டு ‘இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை’ என தெளிவாக சொல்லியிருக்கிறார். மேலும் ‘உலகமே கொரோனோ பேரிடரை சந்தித்திருக்கும் நிலையில் மதபிளவுகளை ஏற்படுத்த நினைக்கும் உங்களது கனவு பலிக்காது’ என்றும் காட்டமாக விமர்சித்தார். கைது செய்யப்பட்டவர்களின் மதத்தை குறிப்பிடும் அளவிற்கு நம் நாட்டில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
உள்துறை அமைச்சரின் இந்த வெளிப்படையான அறிவிப்புக்கு பின் சங்பரிவார அமைப்புகள் பிரச்சாரத்தை வேறுவிதமாக திசை திருப்ப முயன்று வருகின்றனர். பல்கார் பகுதியில் இடதுசாரி அரசியல் கட்சிகளும், தீவிர இடது சாரி போராளி குழுக்களும் செயல்படுகின்றனர். பல்கார் மாவட்டம் தானு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வினோத் நிகோலே. எனவே இடதுசாரிகள், கிருஸ்தவ மிஷினரிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இது படுகொலை நிகழ்ந்ததாக போலியாக அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் கூறியுள்ளார். சாதுக்கள் மரணத்தை மத ரீதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.
பல்கர் மாவட்டத்தின் கட்சின்ச்சாலே கிராமத்தில் குழந்தை கடத்தல், மனித உறுப்பு திருடர்கள், கள்ள சாரயாம் கடத்தல் உள்ளிட்ட போலி செய்திகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு, வாட்சப் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பரப்பபட்டும் வந்துள்ளது. இதன் விளைவாக மக்கள் பீதியில் இருந்துள்ளனர். ஊரடங்கின் காரணமாக கட்சின்ச்சாலே கிராமத்து மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க சென்ற உள்ளூர் செயல்பாட்டாளர் மருத்துவர் விஷ்வாஸ் வால்வி கிராம மக்களால் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்கப்பட்டுள்ளார். பக்கத்து ஊரின் ஊராட்சி மன்ற தலைவர், காசா பகுதியின் காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரையும் இந்த உள்ளூர் கும்பல் கடந்த காலங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் தாக்கியுள்ளது. இதனை மதரீதியாக திசை திருப்ப முயற்சிக்கும் சங்பரிவார பா.ஜ.க. வின் அருவருப்பான அரசியல் அப்பட்டமாக இதில் வெளிப்பட்டுள்ளது.
பல்கார் மாவட்டம் ஒரு முஸ்லிம் கூட வசிக்காத ஒரு பகுதி. 93 விழுக்காட்டினர் பழங்குடி இந்துக்கள். இவர்களில் சிலர் கிருஸ்துவ மதத்திற்கு மாறியிருந்த போதிலும் தங்களது பழங்குடி சமூக கடவுள் வழிபாடுகளை தொடர்கின்றனர். இருப்பினும் சங்கபரிவார கும்பல்கள் இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் மீது நடைபெற்ற பல கும்பல் படுகொலைகள் சங்பரிவார அமைப்பினரின் போலி வதந்திகளாலும், பொய்யான வாட்சப் செய்திகளாலும் நிகழ்ந்துள்ளன. கும்பல் படுகொலைகளை துவக்கி வைத்த பா.ஜ.க. வினரின் அரசியலில் இரண்டு அப்பாவி சாதுக்கள் பலியாகியுள்ளனர். அவர்களது மரணத்திலும் கூட தங்களது இந்துத்துவ அரசியல் ஆதாயங்களை தேடுவதற்கு பா.ஜ.க. தீவிரமாக முயற்சிக்கிறது.
கொரோனா பேரிடரில் மக்களை வெறுமென வீடுகளுக்குள் முடக்கி பட்டினிச் சாவுகளை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அரசின் நிர்வாக அலட்சியங்களை மறைப்பதற்காக தப்லீக் ஜமாத், நிஜாமுத்தீன் மர்கஸ் என தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரங்களை பா.ஜ.க. அரசும், வலதுசாரி ஆதரவாளர்களும் பரப்பி மத பிளவுகளை ஏற்படுத்தினர். அதன் காரணமாக வட மாநிலங்களில் சில கிராமங்களில் முஸ்லிம்கள் அடித்து வெளியேற்றப்படுவதும், வணிகம் தடைபடுவதும் தொடர்கிறது. அந்த வெறுப்பின் ஈரம் காய்வதற்குள் சாதுக்கள் பிரச்சனையை கையிலெடுத்து பற்றி எரியும் வெறுப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை சங்பரிவார அமைப்புகள் தொடர்ச்சியாக செய்கின்றன.
சாதுக்களின் மரணத்தில் அரசியல் செய்வதை இந்து தர்மத்தில் உள்ள ஆன்மீகவாதிகளே ஏற்கமாட்டார்கள். மேலும் கும்பல் படுகொலையில் மரணித்த கார் ஒட்டுநரின் பெயரில் பா.ஜ.க. ஆதரவு அமைப்புகளை சார்ந்த நபர்கள் வெளிப்படையாக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார்கள். இதனை பா.ஜ.க. வின் உயர்மட்ட தலைவர்களும் டிவிட்டரில் பகிரத் தொடங்கியுள்ளனர். உண்மையாகவே அந்த நிதி முழுக்க மரணித்தவரின் குடும்பத்திற்கு சேருமா அல்லது அவரின் பெயரை வைத்து இவர்கள் பணம் வசூலித்து லாபம் அடைய எண்ணுகிறார்களா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. இந்த பேரிடரில் நாம் புறக்கணிக்க வேண்டியது போலி செய்திகளும், வதந்திகளும் மட்டுமல்ல பாசிச சங்பரிவாரின் அரசியலையும் தான்.
முஸ்லிம்கள் மீது கும்பல் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட போது அதனை கண்டிக்காமல், தடுக்காமல் இருந்ததுதான் தற்போது சாதுக்களின் படுகொலை வரை சென்றுள்ளது. இதற்கு முன்னரும் ‘குழந்தை கடத்தல்காரர்கள்’ என்ற பெயரில் அப்பாவிகள் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கும்பல் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி பல மாதங்கள் கழிந்த பின்னரும் அது குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது.
– அகமது யஹ்யா அய்யாஷ்