CAA சட்டம் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்ப முடியாது -மத்திய பாஜக அரசு

0

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு எதிராக பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

சிஏஏவை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி 140 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஏஏவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சிஏஏ தொடர்பாக 129 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு நேற்று (மார்ச் 17) தாக்கல் செய்தது. அதில், “குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் சட்டப்பூர்வமானது, அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தின் முன்பு கேள்வி கேட்க முடியாது. குடியுரிமை குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “குடியுரிமை திருத்த சட்டம் ஒரு குடிமகனின் தற்போதுள்ள எந்த உரிமைகளையும் பறிக்காது. இது மக்களின் சட்டபூர்வ, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற உரிமைகளை பாதிக்காது. இந்த சட்டம் எந்த இந்தியர்களுடன் தொடர்புடையதல்ல. இது இந்தியர்களுக்கு குடியுரிமையை பறிக்காது. வழக்கு தொடர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை விளக்கவில்லை” என்றும் பாஜக அரசு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் 1980களில் பெண் முதல்வராக இருந்தவருக்கு குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றிவிட்டு ஓய்வில் இருந்துவந்த பல இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டை பாதுகாத்த முன்னாள் ராணுவ வீரர்களின் குடியுரிமையும் கேள்விக்குறியாக்கியுள்ளது பாஜக அரசின் இந்த மதவாத சட்டங்கள்.

Comments are closed.