தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது மட்டும் தொடரும் நடவடிக்கை பாரபட்சமானது

0

ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் தமிழகத்தில் அவதியுற்று வரும் இந்தோனேசியா, தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களை கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாகவும், சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறி தமிழக காவல்துறை வழக்குகளை பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் மீதும் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

தமிழக காவல்துறையின் இத்தகு மனிதாபிமானமற்ற நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கின்றது. மேலும் கோவை ஜக்கி ஆசிரமத்திலும், இன்னும் பல்வேறு ஆசிரமங்களிலும் வெளிநாட்டு பயணிகள் பலர் தங்கியுள்ள நிலையில் முஸ்லிம்கள் மீது மட்டும் வழக்கு பதிந்து கைது செய்து வருவது பாரபட்சமான நடவடிக்கையாகும்.

உரிய ஆவணங்களோடு தங்கியுள்ள வெளிநாட்டு முஸ்லிம்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பாமல், அப்படி செல்ல முயன்றவர்களையும் தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கைது செய்து சிறைப்படுத்துவது சட்ட விரோதமான நடவடிக்கையாகும்.

மேலும் இவர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கின்றார்கள் என்பதாகும். இந்த குற்றச்சாட்டில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை. ஏனெனில் இவர்களில் பலர் டெல்லி மாநாட்டில் பங்கெடுக்கவே இல்லை. அதேபோல் இவர்களில் டெல்லி மாநாட்டில் பங்கெடுத்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஒன்றுக்கு இரண்டுமுறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று முடிவுகளும் வந்துவிட்டன. நோய்த்தொற்றே இல்லாத நிலையில் நோய்த் தொற்றை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது அடிப்படை ஆதாரமற்றதாகும். அதேபோல் இவர்கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாக எவ்வித குற்றச்சாட்டோ அல்லது ஆதாரமோ இல்லாத நிலையில் சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும் அடிப்படையற்றது.

ஊரடங்கு உத்தரவினால் நாடு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள தமிழக மக்களை அந்தந்த நாடுகள் மனிதாபிமானத்தோடு பராமரித்து வரும் நிலையில் தமிழக அரசின் கைது நடவடிக்கையானது முஸ்லிம்களுக்கு எதிரான மததுவேஷ நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. தமிழக அரசின் இத்தகைய கடும்போக்கு, மதவாத சக்திகளை திருப்திப்படுத்துவதற்காகவோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மேலும் இது பொய்யான வதந்திகளை பரப்பி முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் இந்துத்துவ வகையறாக்களுக்கு வலுசேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய கொரோனா பேரிடர் களத்தில் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இது போன்ற காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். மேலும் உரிய விசாவோடு தங்கள் நாடுகளுக்கு செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லிம்கள் மீது வழக்கு, கைது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை கைவிட்டு, அவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.

Comments are closed.