காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க திட்டம் வகுக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல் நிலையங்களில் அரங்கேற்றப்படும் மனித உரிமை அத்துமீறல்களை கண்காணிக்க அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா பதிவுகளை பாதுகாக்க திட்டம் வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல வழக்கு இன்று (09.10.2020) நீதி அரசர்கள் என் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை வழக்கறிஞர் நிஜாமுதீன் தொடுத்திருந்தார். வழக்கில் மனுதாரர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் I.அப்துல் பாசித், 2015 ஆம் ஆண்டு CHANGE India என்ற அமைப்பு தொடுத்த வழக்கில் தமிழக அரசு 2015ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மொத்தம் 251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் மீதம் உள்ள 1316 காவல் நிலையங்களில் ஐந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டு 2020ஆம் ஆண்டுக்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கில் மனுதாரர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக DGP அலுவலகத்தில் பெற்ற பதிலில், 2017 ஆம் ஆண்டுவரை புதிதாக எந்த ஒரு காவல் நிலையத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டது.
ஒரு புறம் CCTV கேமரா பொருத்துவதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு மற்றொருபுறம் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க திட்டம் வகுக்காமல் மௌனம் காப்பது வருத்தத்தை அளிக்கின்றது.

அதன் விளைவே சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடி மரணத்தின் CCTV கேமரா பதிவுகள் நீக்கப்பட்டிருந்தது நம் அறிந்த ஒன்றே.

ஆகையால் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதும் அதன் பதிவுகளை பாதுகாப்பதும் காவல் நிலையங்களில் ஏற்படும் சித்திரவதை, மரணம் மற்றும் காவல் அதிகாரிகளின் அத்துமீறல்களை தடுக்க எதுவாக இருக்கும்.

அதைப்போல காவல் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பொதுமக்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அல்லது ஏதாவது சிறப்பு சட்டத்தின்கீழ் பெறுவதற்கான நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்..

மேல் கூறப்பட்ட வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு இதுதொடர்பாக நவம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Comments are closed.