பிடிஐ செய்தி நிறுவனத்தை ஒடுக்கும் முயற்சியில் ரூ.84 கோடி அபராதம் விதித்த பாஜக

0

இந்தியாவின் முதன்மை செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவுக்கு (PTI) ரூ. 84 கோடியே 48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டி, இந்த அபராதத்தை மோடி அரசு விதித்துள்ளது. இதுதொடர்பாக, பிடிஐ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய வீட்டுவசதித் துறை, “டெல்லி சன்சாத் மார்க் பகுதியில் பிடிஐ நிறுவன அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு 1984 ஆம் ஆண்டிலிருந்து நில வாடகை செலுத்தவில்லை. அதோடு அடித்தளத்தையும் ஒரு அலுவலகமாக மாற்றி, நில ஒதுக்கீடு விதிமுறைகளை பிடிஐ தவறாக பயன்படுத்தியுள்ளது” என்று குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. அபராத தொகை ரூ. 84 கோடியே 48 லட்சத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

இந்திய – சீன எல்லை விவகாரத்தில், தேச நலனுக்கு விரோதமாக செய்திகளை வெளியிடுவதாக பிடிஐ நிறுவனத்தை மத்திய அரசின் பிரசார் பாரதி குற்றம் சாட்டியிருந்தது. பிடிஐக்கான சந்தா (ரூ. 7 கோடி) செலுத்துவதை நாங்கள் ஏன் நிறுத்தக்கூடாது..? என்றும் பிரசார் பாரதி ஒரு கடிதத்தை பிடிஐ- நிறுவனத்திற்கு அனுப்பியது.

தற்போது ரூ. 84 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று புதிய நெருக்கடியை பிடிஐ நிறுவனத்திற்கு, மத்திய பாஜக அரசு கொடுத்துள்ளது. அவகாசம் வழங்கப்படிருக்கும் நாட்களுக்குள் அபராதம் கட்டாவிட்டால் 10 சதவிகித வட்டியும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்த பத்திரிகை சுதந்திரத்தைத் தடுக்கும் போக்கில் செயல்பட்டுவருகின்றது. பாஜக அரசு ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்கு ஆதரவாக இணக்கத்தை உருவாக்குவதற்கும், ஊடகங்களில் இருந்து கருத்து வேறுபாட்டின் அனைத்து குரல்களையும் அகற்றுவதற்கும் ஒரு தீவிரமான போக்கை வெளிப்படுத்தி வருகிறது.

Comments are closed.