பாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு

0

நாட்டின் 8 பொதுத்துறை நிறுவனங்களையும் முழுமையாக தனியாரருக்கு வழங்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜகவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-இன் தொழிற்சங்க பிரிவான ‘பாரதிய மஸ்தூர் சங்’ (பிஎம்எஸ்) என்ற அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“ரூ.20 லட்சம் கோடிபொருளாதார திட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை 4-வது நாளாக சில அறிவிப்புகளை வெளியிட்டார். இது தேசத்திற்கே துயரமான நாள்”என்று பிஎம்எஸ் பொது செயலாளர் விர்ஜேஸ் உபாத்யாயா கூறியுள்ளார்.

“மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு மாற்றமும் தொழிலாளர்களை பாதிக்கக் கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது” என்று கூறியுள்ள உபாத்யாயா. “தங்களது முடிவுகள் தொடர்பாக, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு வெட்கப்படுகிறது” என்றும் விமர்சித்துள்ளார்.

சமூக தாக்கங்கள் தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையையும் மத்திய அரசு நடத்துவது இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படை என்பதே சமூக உரையாடல்கள்தான். ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது என்றும் உபாத்யாயா குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.