சீக்கியர்கள் – இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்த பாஜக முயற்சி

0

பஞ்சாபில் சீக்கியர்கள், இந்துக்கள் இடையே மோதல் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாக சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தொடர்ந்து21வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸும் எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளமும் ஆதரவு அளிக்கின்றன.

பஞ்சாபில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சிரோமணி அகாலி தளம் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பதின்டா நகரில் கட்சிநிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர் என்று போற்றப்படுகின்றனர். அரசை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு எதிர்த்து ஹர்சிம்ரத் கவுர் பாதல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிரகாஷ் சிங் பாதல் தனது பத்ம விபூஷண் விருதை திருப்பி அளித்துள்ளார். அவர்கள் இருவரும் தேசவிரோதிகளா?

நாட்டின் ஒற்றுமையை பாஜக சீர்குலைத்து வருகிறது. முதலில் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே மோதலை ஏற்படுத்தியது. தற்போது பஞ்சாபில் சீக்கியர்கள், இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்த அந்த கட்சி முயற்சி செய்து வருகிறது. புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பாஜக அரசு அறிவித்தால், டெல்லி போராட்டத்திலுள்ள விவசாயிகள் அனைவரும் பஞ்சாபுக்கு திரும்புவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.