அல்-குர்ஆனுடன் உறவாடுதல்…

0

அல்குர்ஆனை ஓதுதல் என்பது, அல்குர்ஆனுடனான நமது உறவின் ஒரு ஆரம்ப நிலையாகும். இந்த உறவின் அழுத்தமான மற்றொரு கட்டமாகவே அதனுடன் ஒன்றிணைந்து உறவாடுதல் என்ற நிலை காணப்படுகின்றது. இந்த இரண்டாம் கட்டத்தை அடைந்து கொள்வதற்கு பொறுமையுடன் கூடிய நீண்ட முயற்சியும் பயிற்சியும் அவசியப்படுகிறது. குறிப்பாக இந்த நகர்வின் ஆரம்ப நாட்களில் இதன் அவசியம் மிகவும் அழுத்தமானது. சாதாரணமாக அல்-குர்ஆனை திருத்தமாக ஓதுவதற்கே ஒரு பயிற்சி அவசியப்படுகிறது. அதேபோல், அர்-குர்ஆனுடன் ஒன்றித்துப் போகவும், அதனுடன் வாழவும், அதிலிருந்து சிந்தனைகளையும் நடைமுறைகளையும் பெற்றுக் கொள்ளவும் ஒரு பயற்சி அவசியப்படுகிறது.

அத்தகைய ஒரு பயிற்சிக்கு துணை செய்யக் கூடிய இரண்டு காரணிகளை இங்கு காணலாம்.
1. அல்-குர்ஆனின் பயனை அனுபவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்தல்.
2. அல்-குர்ஆனை ஓதுவதற்கான ஒழுக்கங்களைப் பேணுதல்.‘

1. அல்-குர்ஆனின் பயனைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்தல்.

அல்குர்ஆனின் சிந்தனைக்குள் நுழைவதற்கான திறவுகோல் இந்த நிபந்தனையிலேயே தங்கியிருக்கிறது. அதுதான் அல்லாஹுத்தஆலா மீதான பயம். இங்கு பயம் என்பது விரண்டோடுகின்ற பயம் அல்ல. அல்லாஹுத்தஆலா மீது விருப்பத்தையும் அன்பையும் கண்ணியத்தையும் ஞாபகப்படுத்துகின்ற பயம். அல்லாஹ்வின் வழிகாட்டல் நமது நலனுக்கானது. அதனைப் புறக்கணிப்பதால் நானே எனக்கு தீமையைத் தேடிக் கொள்கிறேன். எனவே, எனக்கு தீமை நிகழ்ந்து விடக்கூடாது என்ற உணர்வின் உந்துதலே இந்தப் பயம். இதனைத்தான் நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள், ‘யார் பயப்படுகின்றாரோ அவர் நுழைந்து விடுவார். நுழைபவர் உரிய அந்தஸ்த்தை அடைந்து கொள்வார்… ’

அல்குர்ஆனை ஓதும்போது அல்லது அதனை செவிமடுக்கும்போது அது பேசும் சிந்தனைகளை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தான் புரிந்து கொண்டதை தனது வாழ்வில் எப்போது பிரயோகிப்பார் எனின் அதனுடைய அவசியத்தை அவர் தனது வாழ்வில் உணர்கின்றபோதுதான் அது சாத்தியப்படுகிறது.

அவசியத்தை எப்போது உணர்வார்? அது எந்தளவு தனது வாழ்வைப் பாதிக்கப் போகிறது என்ற அச்சம் அவரை ஆட்கொள்கின்ற போதே அதன் அவசியம் அங்கு உணரப்படுகிறது. அல்லாஹுத்தஆலா இதனை இவ்வாறு பேசுகிறான், ‘உங்களுக்கு தீங்காக அமைவதற்காக அல்குர்ஆன் இறக்கப்படவில்லை. மாற்றமாக, பயப்படுபவர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலாகவே காணப்படுகின்றது’. (தாஹா 1-3)

2. அல்குர்ஆனை ஓதுவதற்கான ஒழுங்குகளைப் பேணுதல்

நாம் அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் அதன் சிந்தனைகளை விளங்கி நடைமுறைப்படுத்துவது நோக்கமாக இருக்கின்றது. அல்குர்ஆனை ஓதுகின்றபோது அல்லாஹுத்தஆலாவின் ஞான ஒளி, நாம் செய்யும் பாவங்களின் காரணமாக நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கின்றது. எனவே, இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புக் கேட்டல், அல்குர்ஆனை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு நிபந்தனையாகிறது.
அல்குர்ஆன் கூறுகிறது:
‘நீங்கள் அவர்களுடன் இருக்கின்ற போது அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான். அதுபோல் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்கின்ற போதும் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான்’. (அன்பால்: 33)
அல்குர்ஆனின் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடியாமல் போவதும் ஒரு விதமான தண்டனையே. எனவே, இங்கு உள்ளத்தால் உணர்ந்த ஒரு உண்மையான பாவமீட்சி அவசியப்படுகிறது. வெறுமனே நாவோடு மாத்திரம் சுருங்கிய ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என்ற வார்த்தை மொழிவு மாத்திரம் போதாது. அப்போதுதான் கதவுகள் திறந்து கொள்ளும், சிந்தனைகள் ஊற்றெடுக்கும்.

அடுத்து நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல். இதனால் அல்லாஹ்வும் நம் மீது ஸலவாத்துச் சொல்கிறான். அவனது அருளை நம்மீது சொரிகின்றான. அவனது வார்த்தைகளை ஜீரணிப்பதற்கு இந்தப் பேரரருள் நமக்கு துணை செய்யப் போகின்றது.

இத்துடன் ஸதகா செய்கின்ற பழக்கம் மிகவும் முக்கியமானது. நீர் நெருப்பை அணைத்து விடுவது போல் ஸதகா பாவங்களை அணைத்து விடுகிறது. இவற்றுடன் “யா அல்லாஹ் அல்குர்ஆனை விளங்கிக் கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக” என்ற பிரார்த்தனையும் உடன் இணையுமாக இருந்தால், நாம் பாவங்கள் களைந்து அருள் பெற்று சிறந்த விளக்கங்களையும் பெற்றவர்களாக மாறுவோம்.

அறிஞர் ஸலாஹ் காலிதி என்பவர், ‘அல்குர்ஆனுடன் உறவாடுவதற்கான திறவுகோள்கள்’ என்ற தனது நூலில் அல்குர்ஆனை ஓதும்போது பேண வேண்டிய சில ஒழுக்கங்களை பேசியிருக்கின்றார். அவற்றை இங்கு சுருக்கமாக தருகிறோம்.

1. அல்குர்ஆனை ஓதுவதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். மிகச் சிறந்த நேரம் இரவின் மூன்றாவது பகுதியான ஸஹர் நேரம். அடுத்து பொதுவாக இரவு நேரம். அடுத்து அதிகாலை நேரம். அடுத்து ஸுப்ஹ் தொழுகைக்கு பின்னர் உள்ள நேரம். அடுத்து ஏனைய பகல் பொழுதுகள்.

2. பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பள்ளிவாயலே மிகவும் பொருத்தமான இடம். வீடாக இருப்பின் அதற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடமாக இருப்பது சிறந்தது. பொதுவாக எந்த இடத்திலும் ஓதலாம். ஆனால், சந்தடிகளற்ற கவனச் சிதைவுகளற்ற அமைதியான சுத்தமான இடமாக இருப்பது முக்கியமானது. ஏனெனில், அல்குர்ஆன் மழையைப் போன்றது. அது கற்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது. தயார் நிலையில் உள்ள பூமி மீதே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அல்குர்ஆனும் அமைதியுடன் தயார் நிலையில் உள்ள உள்ளத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

3. அல்லாஹ்வே நமக்குத் தஞ்சம், அவனே நமக்குப் பாதுகாப்பு. எனக்கு மீட்சி. எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்த அறிவும் இல்லை. எல்லாம் அவன் தருபவையே என்று முழுமையாக அல்லாஹ்விடத்தில் தன்னை அர்ப்பணித்த மனோநிலையுடன் அல்குர்ஆனை ஓத வேண்டும். இத்தகையவர்களிடத்தில்தான் அல்குர்ஆனின் அறிவு பிரவாகித்து ஓடத் தொடங்கும்.

4. ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடும் வார்த்தைகளில் தொடங்கி, அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்க வேண்டும். இது வெறுமனே வார்த்தையுடன் மாத்திரம் நின்று விடுவதாக அமைந்து விடக்கூடாது. அந்த வார்த்தைகளின் பொருளின் ஆழத்தை உணர்ந்து உச்சரிக்க வேண்டும். ஷைத்தான் எவ்வளவு பெரிய எதிரி. என்னை வழிகெடுப்பதை மாத்திரமே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவன். அவனிடத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது அல்லாஹ்வின் மூலமே சாத்தியப்படுகிறது.

5. உள்ளத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். புறத் தேவைகளை எதிர்பார்த்த நிலையில் உள்ளம் இருக்கக் கூடாது. அவற்றை நிறைவு செய்த பின்னரே ஓத ஆரம்பிக்க வேண்டும். இல்லாதபோது அதனுடன் ஒன்றித்து வாழ்வது சாத்தியமற்றுப் போகிறது. பசி, தாகம், உபாதைகள், கவலை, சூடு, குளிர் போன்ற பல விஷயங்கள் மனதின் அமைதியை குலைத்து விட முடியுமானவை.

6. ஓதும்போது தனது சிந்தனையை முழுமையாக குர்ஆனுடனேயே வைத்திருக்க வேண்டும். அதனை வேறு எங்கும் சிதற விடக்கூடாது. புலனுணர்வுகள் அனைத்தும் ஒருசேர அல்குர்ஆனில் ஒன்று குவிகின்ற போதே அதன் அறிவியல் உண்மைகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

7. அல்குர்ஆனின் ஓட்டத்துடன் இரண்டரக் கலந்து உறவாடிக் கொண்டு அதனை ஓதுதல் வேண்டும். ஒரு சுபசோபன செய்தி வருகிறபோது சந்தோசத்தை வெளிப்படுத்துதலும் தண்டனையையும் வேதனையையும் பற்றி பேசுகிறபோது கவலையையும் அழுகையையும் வெளிப்படுத்துதலும் பாவங்களைக் கூறும்போது அருவருத்தலும் தூரமாகுதலும் கடமைகளைக் கூறும்போது உற்சாகமடைதலும் நடைமுறைப்படுத்தும் உறுதி கொள்ளுதலும் அதன் வடிவங்களாகும்.

8. அல்குர்ஆன் நம்மை நோக்கியே பேசுகிறது என்ற உணர்வுடன் அதனை ஓத வேண்டும். அதன் ஒவ்வொரு கட்டளையும் ஒவ்வொரு எச்சரிக்கையும் ஒவ்வொரு உபதேசமும் என்னை நோக்கியே சொல்லப்படுகிறது என்று அழுத்தமாக உணர வேண்டும். அப்பொழுதுதான் ஈமான் கொண்டவர்களே என்று அல்குர்ஆன் அழைக்கும்போது நமது கண்களும் காதுகளும் உள்ளமும் விளித்துக் கொள்ளும். எனக்கு ஒரு கட்டளை வரப்போகிறது. அதனை ஏற்கத் தயாராக வேண்டும் என்ற உணர்வு வருகிறது. மாத்திரமன்றி, ஒவ்வொரு வசனத்தையும் நின்று நிதானித்து ஓதுவதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது எனக்கு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள முற்படும்போது நிச்சயமாக நிதானமாகவே ஓதுவோம். அவசரமாக பக்கங்களைப் புரட்டி விட்டு ஓடி விட நினைக்க மாட்டோம்.

அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி

Comments are closed.