ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுதலை!

0

இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 18ஆம் தேதி 2007ஆம் ஆண்டு அன்று நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த குண்டுவெடிப்பில் ரயிலின் இரு பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்தன.

இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையை அரியானா காவல்துறை மேற்கொண்டது. ஜூலை 2010 இல் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையான NIAயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூலை 2011 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த NIA 8 நபர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, கமால் சவுகான் மற்றும் ராஜேந்தர் சவுத்ரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி டிசம்பர் 2007ல் அடையாளம் தெரியாத நபர்களால் அவரின் வீட்டின் அருகிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். ராமச்சந்திர கல்சாங்ரா, சந்தீப் டாங்கே மற்றும் அமித் ஆகிய மூவர் தலைமறைவாக உள்ளனர்.

வழக்கை விசாரித்த பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் அசீமானந்தா உள்ளிட்ட நால்வரையும் இந்த வழக்கில் இருந்து நிரபராதிகள் என்று கூறி மார்ச் 20ஆம் தேதி அன்று விடுவித்தது. இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து சில சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவரும் முன்வைத்த கோரிக்கையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஏற்க மறுத்துவிட்டார்.

அசீமானந்தா ஏற்கனவே ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார். 2014இல் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்துத்துவ தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து பெரும்பான்மையினர் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.