என்கவுண்டர் தான் தீர்வா..?

0

என்கவுண்டர் தான் தீர்வா?

பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஆஷிபாவை கொன்ற கோவில் பூசாரியை? உன்னவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை..? அரியலூரில் நந்தினி என்ற சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இந்து முன்னணி நிர்வாகியை..?

சென்னையில் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, தனது தாயையும் கொலை செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தை..? சென்னை எர்ணாவூர் மீனவக்குடியிருப்பை சேர்ந்த 3 வயது சிறுமி ரித்திகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சேகரை..? சேலத்தில் தலித் சிறுமி ராஜலெட்சுமியை சாதி ஆணவத்தால் வன்கொடுமை செய்ய முயன்று தலையை வெட்டிக்கொன்ற கொடூரனை..?

பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையை சூரையாடிய கொடூரர்களை..? பல பெண்கள் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார்கள் ராம் ரஹீமை, ஆசாரம் பாபுவை, நித்தியானந்தாவை இதுபோல் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றார்களா..?

நான் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் முன் இந்த துப்பாக்கி முனை நீளுமா? நீளாது… ஏனெனில் அவர்கள் சமூகத்தின் மேல்தட்டில் உள்ளவர்கள். அல்லது பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் கீழ்தட்டில் உள்ளவர்கள். என்றுமே சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளவர்கள் மீது மட்டுமே சட்டம் தன் கடமையை செய்யும். ஹைதராபாத் என்கவுண்டரும் சட்டப்படி நடக்கவில்லை. என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள், சிறைச்சேதம் செய்யப்பட்டவர்கள் யாவருமே இதுபோன்றவர்கள் தான்.  இந்த என்கவுண்டர் யாரை காப்பாற்றிக்கொள்வதற்காக நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

சட்டப்படியாக உடனடி தண்டனை வழங்கும் முறை அமல்படுத்தாதவரையும், பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரையும், சமூகத்தில் பெண்கள் மீது கொடூரமனம் கொண்ட ஆண்களின் பாலியல் வன்மம் உளவியல் ரீதியாக மாறாதவரை இந்த குற்றங்களை தடுப்பது கடினம் என்பது இயல்பான கருத்தாகும்.

Comments are closed.