குஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை

0

1998 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். குறிப்பாக, 2001 முதல் 2014 வரையிலும் தற்போதைய பிரதமர் ஆட்சி செய்த குஜராத் சுகாதாரத் துறையை அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

எல்லாத் துறைகளிலும் அதீத வளர்ச்சி, மற்ற மாநிலங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய “குஜராத் மாடல்” என 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரம் செய்தனர். ஆனால், அம்மாநில உயர்நீதிமன்றத்தினாலேயே மாநில நிர்வாகம் கேள்விக்கணைகளால் துளைக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசு பொது மக்களுக்கு இது வரை எந்த அளவில் கட்டமைப்பு வசதிகளையும் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படும் மாநிலங்களான மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத் உள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 14821 நபர்கள் பாதிக்கப்பட்டு 915 நபர்கள் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 54,758 நபர்கள் பாதிப்பிற்குள்ளாகி 1792 நபர்கள் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக நபர்கள் குஜராத்தில்தான் மரணம்டைந்துள்ளனர்.

இந்நிலையில்தான் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரனையை மேற்கொண்டது குஜராத் உயர்நீதிமன்றம். அகமதாபாதில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 350க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே பல நோயாளிகள் இங்கு மரணமடைந்துள்ளனர்.

சுமார் 110 ஏக்கரில் அமைந்துள்ள இந்தியாவின் பெரிய மருத்துவமனைகளில் இங்கு கொரோனா சிறப்புப் பிரிவில் சுமார் 1200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ள போதிலும், பாஜக அரசின் நிர்வாகத் திறமையற்ற ஆட்சியினாலும் ஏழை எளிய மக்களின் மீதான அக்கறையின்மையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இறப்பு விகிதத்தில் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மக்களினுடைய அடிப்படைத் தேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதிப் படுத்துவது ஆட்சி செய்யக் கூடிய அரசாங்கத்தின் மீதான தார்மீகக் கடமை என்று குஜராத் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘ஆதரவற்ற ஏழை எளிய மக்கள் தங்களின் மருத்துவ வசதிக்காக அரசு மருத்துவமனைகளையே சார்ந்துள்ளனர். அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று மருத்துவம் பார்ப்பதற்கு வேறு வழி ஏதும் இல்லை. இப்படி ஏழை மக்களின் தீர்வாக இருக்கக் கூடிய ஒரு அரசு மருத்துவமனை மிக மோசமான ‘டன்ஜன்’ (பாதாள அறை) போல உள்ளது’ என்பதனை மிக வருத்தத்துடன் பதிவு செய்ததுள்ளது உயர்நீதிமன்றம்.
குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சரான நிதின்பாய் ரட்டிலால் எத்தனை முறை அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்? அங்கு பணிபுரியும் மருத்துவர்களின் நிலை மற்றும் பிரச்சனைகள் என்ன? செவிலியர்களின் நிலை என்ன? நோயாளிகளின் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்ன? என்றுஉயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றது. அந்த உயிர் இவ்வாறான அரசு மருத்துமனையில் பிரிவதை அனுமதிக்க முடியாது என தங்களின் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அங்கு நடத்தப்பட்ட விதத்தை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலம் என்பதைத் தாண்டி இருவரும் இதற்கு முன்பாக ஆட்சி செய்த மற்றும் அரசின் முக்கிய இலாக்ககளின் பங்குதாரர்கள் என்ற அடிப்படையிலேயே உயர்நீதிமன்றத்தின் இந்த கேள்விகளை நாம் முன்னோக்க வேண்டும்.

வளர்ச்சியின் நாயகன் என்று ஊடகங்கள் மூலம் இந்திய மக்களை நம்பவைத்து, இன்று முழுக்க முழுக்க கார்பரேட்டுகளுக்கு இந்திய வளங்களை தாரைவார்க்கும் நாட்டின் பிரதமர் மோடியினால் நம் நாட்டு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சொல்ல இயலா பல துன்பங்களையும், வேதனைகளையும் தீர்க்க இயலாது என்பதையே இது காட்டுகிறது.

ஷா.காதர் கனி

Comments are closed.