குருஜி என்றழைக்கப்பட்ட இந்திய நாஜி!

0

குருஜி என்றழைக்கப்பட்ட இந்திய நாஜி!

மத்திய கலாச்சாரத்துறையின் ட்விட்டர் பக்கத்தில், ‘ஆழ்ந்த சிந்தனையாளரைத் தலைவணங்குகிறோம். அவரது சிந்தனைகள் எதிர்வரும் தலைமுறைகளை ஆட்கொள்ளும்’ என்று பொருள்படுமாறு வாழ்த்துச் செய்தியோடு வெளியாகியிருக்கிறது ‘குருஜி’ கோல்வால்கரின் பிறந்தநாள் செய்தி.

இந்தியப் பிரதமர் மோடி தான் ஆதர்சமாகக் கருதும் மனிதர்களின் பட்டியலில் கோல்வால்கருக்கு இரண்டாம் இடத்தை அளித்துள்ள போதும், கடந்த சில ஆண்டுகளாக மோடி, மோகன் பகவத் முதலானோர் கோல்வால்கரிடம் இருந்து சற்று தள்ளியே நிற்கின்றனர். கோல்வால்கரின் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன; ஆனால் சர்வதேச அழுத்தத்தை மனதில் கொண்டு, நாஜிகளின் கொள்கைகளை இந்தியமயப்படுத்தி எழுதப்பட்ட அவரது புத்தகங்களின் சமீபத்திய பதிப்புகளைத் திருத்தம் செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாம் சர்சங்சாலக் கோல்வால்கர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தோற்றுவித்த ஹெட்கேவார் தனக்குப் பிறகு அமைப்பின் தலைமைப் பொறுப்பை கோல்வால்கருக்கு அளித்தார். இந்துக்களை ராணுவமயப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தற்போதைய வடிவத்தையும், லட்சியத்தையும் உருவாக்கியவர் கோல்வால்கர். அவரது கொள்கைகள் பெரும்பாலும் ஜெர்மானிய நாஜி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

1940 முதல் 1973 வரை, ஏறத்தாழ 33 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உச்சபட்ச பதவியை அனுபவித்தவர் அவர். தற்போதைய பி.ஜே.பியின் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கம் இவரது ஆலோசனையால் உருவானது.

ஜன சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பு, செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தேர்தல் கட்சிக்கும் இடையிலான உறவு குறித்து பேசிய கோல்வால்கர், ‘பகவான் கிருஷ்ணர் தனது கட்டைவிரலுக்குக் கீழ் மிகப்பெரிய ராஜ்ஜியத்தை வைத்திருந்த போதும், அதனை ஆட்சி செய்யாமல் தவிர்த்தார். அப்படியான திட்டம் எங்களுக்கு இருக்கிறது’ என்றார்.

1942ஆம் ஆண்டில், ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பங்கேற்க கூடாது என்ற ஆணையைப் பிறப்பித்த கோல்வால்கர், 1946-47ஆம் ஆண்டுகளில் எழுந்த பிரிவினைக் கலவரங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைக் கலந்துகொள்ளக் கூறி ஊக்குவித்தார். காவல்துறை, ராணுவம் முதலான பாதுகாப்புத்துறை சார்ந்த அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊடுறுவலைத் தோற்றுவித்தவரும் இவரே.

இந்தியாவின் அதிகார மாற்றத்திற்குப் பிறகு, இந்தியக் கொடியையும், அரசியலமைப்பையும் ஏற்காமல் இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இடியாக விழுந்தது அதன் மீதான தடை. காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டு, கோல்வால்கரும் சிறையில் அடைக்கப்பட்டார். சங்கிகளின் வரலாற்றை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், இந்த ஒற்றுமையைக் கவனிக்காமல் இருந்துவிட முடியாது. அந்தமான் சிறையில் பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது போல், நேரு அரசுக்குத் தொடர்ந்து விளக்கக் கடிதங்களை எழுதினார் கோல்வால்கர். அவருக்குப் பிறகு வந்த சர்சங்சாலக் தேவ்ராஸ் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்துத் தடையை நீக்குமாறு சிறையில் இருந்து கடிதங்கள் எழுதிக் கெஞ்சியதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வீர வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்று.

நேருவுக்கும் படேலுக்கும் கோல்வால்கர் எழுதிய கடிதங்களின் விளைவாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கான கொள்கைகள், விதிமுறைகள் முதலானவை எழுத்து வடிவில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியக் கொடியையும், அரசியலமைப்பையும் ஏற்பதாக ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்ட பிறகே, தடை நீக்கப்பட்டது; கோல்வால்கர் விடுதலை செய்யப்பட்டார்.

கோல்வால்கர் எழுதிய Bunch of thoughts மற்றும் We or our Nationhood Defined ஆகிய புத்தகங்கள் இந்துத்துவத் தத்துவத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவை. இந்திய சாதி முறையைப் போற்றும் கோல்வால்கர், இந்து மதம் பல்வேறு படையெடுப்புகளையும், பண்பாட்டு மாற்றங்களையும் சந்தித்த போதும், உயிர்ப்புடன் இருப்பதற்கு வர்ண தர்மமும், சாதிய முறையும் காரணம் என்று அதனைப் பெருமையுடன் அணுகுகிறார்.

ஜனநாயகத்தைக் கடுமையாக எதிர்த்த கோல்வால்கர், ‘ஜனநாயகம் என்ற கொள்கையைப் பற்றிய தவறான புரிதலின் விளைவாக, நம்மை அடிமையாக்கியவர்களுடனும், நமது எதிர்களுடனும் இணைந்து நம்மை நாமே ‘இந்தியர்’ என்று அழைக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த விஷ பந்தத்தின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதும் நமக்குத் தெரியும். நமது எதிரிகளை நண்பர்கள் எனக் கருதியதால், நமது கைகளாலே நம் உண்மையான தேசிய உணர்வைப் பின்னுக்குத் தள்ளுகிறோம்’ என்றார். இங்கு அவரால் எதிரிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் – முஸ்லிம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகியோர்.

சி.ஏ.ஏ என்றழைக்கப்படும் குடியுரிமைச் சட்டதிருத்தம், இந்து ராஷ்ட்ரம் அமைப்பதற்காக கோல்வால்கர் முன்வைத்த கனவுத் திட்டங்களுள் ஒன்று. ’ஜெர்மனி தனது தேசியப் பெருமிதத்தைக் காப்பதற்காக யூதர்களை அழித்து முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. ஜெர்மனியில் தனது ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் முன்வைத்த அந்தத் தீர்வில் இருந்து இந்துஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார் அவர்.

‘இந்திய அரசியலைப்புச் சட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் எழுதப்பட வேண்டும். அதன்மூலம், இந்திய அரசு (மத்திய அரசு) அனைத்து அதிகாரங்களையும் பெற வேண்டும்’ என்று எழுதிய இந்த ‘ஆழ்ந்த’ சிந்தனையாளருக்கு இன்று 115வது பிறந்தநாள்.

– ர.முகமது இல்யாஸ்.

Leave A Reply