சசிகுமார் இறுதி ஊர்வல கலவர பாதிப்பு: இந்து முன்னணியிடம் இருந்து 5 கோடி வசூலிக்க மனு

0

சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த கலவரத்தில் ஏற்படுத்திய சேதத்திற்கு ஹிந்து முன்னணியிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் வசூலிக்க ஆட்சியரிடம் மனு

கோவை மக்கள் ஒற்றுமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.பத்பாநாபன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் ஆர்.கலையரசு ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த செவ்வாய் கிழமை மனு ஒன்று அளித்தனர். அதில், மூன்று வருடத்திற்கு முன்னாள் இந்து முன்னணியை சேர்ந்த சசி குமார் இறுதி ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் பொதுச் சொத்திற்கு ஏற்படுத்திய சேதத்திற்கு பகரமாக அவர்களிடம் இருந்து ஐந்து கோடி ரூபாய் நஷ்டயீடு பெறுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் தேதி இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் சுப்ரமணியபாலயத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நடைபெற்ற மறுநாள் சசிகுமாரின் உடலை கோவை மருத்துவ கல்லூரியில் இருந்து தடியலூர் எடுச்சென்ற இந்து முன்னணியினர், சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தை கலவரமாக்க முயற்சித்தனர். இதனை தங்களது மனுவில் குறிப்பிட்ட மனுதாரர்கள், “அவர்கள் இந்த கலவரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்தனர். அவர்கள் காவல் துறையின் ஆறு வாகனங்களையும், 34 அரசு பேருந்துகளையும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான 39 கடைகளையும், இந்துக்களுக்கு சொந்தமான 15 கடைகளையும் சூறையாடி, 10 தனியார் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்து முன்னணியினர் மீது ரேஸ் கோர்ஸ், சாய்பாபா காலனி, குனியமுத்தூர், தடியலூர் மற்றும் மேலும் பல காவல் நிலையங்களில் சுமார் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 642 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்று அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் “மெட்ராஸ் உயர் நீதிமன்றம், இவர்கள் ஏற்படுத்திய சேதத்தை கணக்கிட்டு அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்குமாறு நகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் அக்கட்சியினரால் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுமானால் அந்த கட்சிகளிடம் இருந்து நஷ்டயீடு வசூலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்களில் இந்த உத்தரவை பின்பற்ற மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தவறியுள்ளது. அதனால் இந்து முன்னணியினரிடமிருந்து ஐந்து கோடி ரூபாயை வசூலிக்க கமிட்டி ஒன்றை அமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என்று மனுதாரர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.