மதவெறிப் பேர்வழியை மகானாக சித்தரிப்பதா?

0

மதவெறிப் பேர்வழியை மகானாக சித்தரிப்பதா?

மகாராஷ்ட்ர மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை, இந்துத்துவா கருத்தியலின் தந்தையான வி.டி. சாவர்க்கருக்கு, ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்திடுவோம் என முன்மொழிந்திருக்கிறது. இது, சாவர்க்கர் போன்ற வெறிபிடித்த இந்துத்துவா பேர்வழியை மகானாக சித்தரித்திட முயல்வது, இந்துத்துவா சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்கிட ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் மேற்கொண்டுவரும் செயல்தந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியேயாகும்.  இதனை நிலைநிறுத்துவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் சாவர்க்கர் குறித்து ‘அவர் மாபெரும் விடுதலைப் போராளி’ என்றும், ‘மாபெரும் தேசியவாதிகளுக்கு இணையானவர்’ என்றும் காட்டுவதற்காக கட்டுக்கதைகளைத் தயாரிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.

இவர்களின் கட்டுக்கதைகளை ஒழித்துக்கட்ட வேண்டியதும், இது தொடர்பாக இந்துத்துவா சக்திகள் அவிழ்த்துவிடும் சரடுகளை தோலுரித்துக் காட்ட வேண்டியதும் அவசியமாகும்.

சாவர்க்கர், சுதந்திரப் போராட்டத்திற்கான புரட்சிகரப் போராளியாகத் தான் ஆரம்பத்தில் இருந்தார். ஆனால், இவ்வாறான இவருடைய புரட்சிகரமான வாழ்க்கை என்பது 1911இல் ஆயுள் முழுவதற்கும் நாடுகடத்தும் தண்டனையை இருமுறை பெற்று,   அந்தமான் செல்லுலர் சிறைக்கு அனுப்பப்பட்டபோது முடிந்துவிட்டது. சிறைக்குச் சென்ற 1911ஆம் ஆண்டிலேயே அவர், கருணைகாட்டுமாறு கோரி பிரிட்டிஷாருக்கு மனு அனுப்பினார். பின்னர் இதேபோன்று 1913, 1917 மற்றும் 1920களிலும் அனுப்பினார். இந்த மனுக்கள் அனைத்திலும் அவர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தார். மேலும் பிரிட்டிஷ்  அரசாங்கத்திற்காக, அவர்கள் எவ்விதம் விரும்புகிறார்களோ அவ்விதம் வேலை செய்யவும் தயாராக இருப்பதாகவும், 1913இல எழுதியிருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கணேஷ் கோஷ், சதிஷ் பக்ராஷி, ஹரிகிருஷ்ண கோனார் , சுபோத் ராய் போன்று பின்னர் கம்யூனிஸ்ட்டு தலைவர்களாக மாறிய தோழர்களுடன் நூற்றுக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்கள் கடைசிக் காலம் வரையிலும் உறுதியுடன் நின்று தியாகங்கள் புரிந்ததற்கு முற்றிலும் முரணாக சாவர்க்கர் இவ்வாறு தன் கோழைத்தனத்தைக் காட்டி இருந்தார்.

1923இல் சிறையிலிருந்து வெளிவந்தபின், சாவர்க்கர் தான் பிரிட்டிஷாருக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் விதத்திலேயே நடந்து கொண்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்தவிதமான போராட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. மாறாக, அவர் இந்து மகா சபையின் தலைமைப் பொறுப்பினை எடுத்துக் கொண்டார்.

முஸ்லீம்களுக்கு எதிராக தன் முயற்சிகளைக் கவனம் செலுத்துவதற்காகவும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை எந்தவிதத்திலும் ஏற்பட்டுவிடாமல் தடைசெய்திடவும் கவனம் செலுத்தினார். சாவர்க்கர், 1923இல் தன்னுடைய ‘இந்துத்துவா’ என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இதில்தான் நாட்டில் முதன்முதலாக அவர் இரு தேசக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறார். மேலும் இந்துக்களுக்கு   பித்ருபூமியும், புண்ணிய பூமியும் இந்தியாவின் எல்லைக்குள்தான் இருப்பதாக அதில் அவர் வரையறுத்துள்ளார். மதங்களின் மூலவேர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தவை என்று கூறுபவர்கள், இந்து தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. இத்தகைய மதவெறிப் பார்வைதான் இந்துத்துவாவில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் இரண்டாவது தலைவராக இருந்த கோல்வால்கர் காலத்தில் இதனைத் தழுவிக் கொண்டது.

இவ்வாறு உண்மையில் பிரிட்டிஷாரிடம் சரணாகதி அடைந்த பேர்வழியை, சிறையிலிருந்து வெளிவந்தபின் தன் எஞ்சிய காலம் முழுவதும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்திலேயே வாழ்ந்த ஒருவரை, மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் என்று சித்தரிப்பது, உண்மையின் கேலிக்கூத்து  (travesty of truth) என்று சொல்வதைவிட வேறென்ன சொல்ல முடியும்!

சாவர்க்கர், இந்து மகா சபையின் தலைவராக இருந்த சமயத்தில் எண்ணற்ற கபடத்தனங்களைச் செய்திருக்கிறார். அவர் கக்கிய முஸ்லீம் எதிர்ப்பு விஷம், காந்திஜியையும் விட்டுவைக்கவில்லை. இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக, காந்திஜி மேற்கொண்ட முயற்சிகளை சாவர்க்கர் கடுமையாக எதிர்த்தார். காந்திஜி தன் வாழ்நாளின் கடைசிக் காலங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தணிப்பதற்காக,  மேற்கொண்ட முயற்சிகளையும் சாவர்க்கர் கடுமையாக எதிர்த்தார்.  1948 ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே காந்திஜியைப் படுகொலை செய்தபோது, காவல்துறையினர் இது தொடர்பாக வி.டி.சாவர்க்கர், மாதவ் ஆப்டே, வி.ஆர். கர்கரே மற்றும் பலர் மேற்கொண்ட சதித் திட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். காந்திஜி கொல்லப்பட்டது தொடர்பாக, சதிக் குற்றச்சாட்டின்பேரில் நடைபெற்ற கிரிமினல் வழக்கில் சாவர்க்கரும் மற்றவர்களுடன் சேர்ந்து, நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார்.   விசாரணை நீதிபதி, தீர்ப்பு அளிக்கையில் சதிக் குற்றத்தில் சாவர்க்கரது பங்களிப்பு குறித்து அப்ரூவர் அளித்திட்ட சாட்சியத்தை ஒத்துரைத்து
தனிப்பட்ட, சுயேச்சையான சாட்சி எவரும் சாட்சியம் கூறவில்லை எனக்  கூறி, சந்தேகத்தின் பலனை அளித்து அவரை  விடுதலை செய்துவிட்டார்.

1966இல் நீதியரசர் ஜீவன் லால் கபூர் தலைமையில், காந்திஜியின் கொலை தொடர்பாக நடைபெற்ற சதி குறித்து விசாரணை செய்வதற்காக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. காந்திஜி கொலை தொடர்பாக தீட்டப்பட்ட திட்டம் சில நபர்களுக்குத் தெரியும் என செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இவ்வாறு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

1948இல் சாவர்க்கருக்கு எதிராக நடைபெற்ற வழக்கின்போது அளிக்கப்பட்ட சாட்சியங்களைவிட அதிகமான அளவில் காந்திஜியின் கொலை தொடர்பாக சாவர்க்கருக்கு இருந்த பங்களிப்பு குறித்து நீதியரசர் கபூர் முன்பு சாட்சியம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்,  அவர், “என் முன் உள்ள உண்மைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, காந்திஜி அவர்கள் சாவர்க்கர் மற்றும் அவரது குழுவினரால் கொலை செய்யப்படுவதற்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று முடிவு செய்வதைத் தவிர வேறெந்த முடிவிற்கும் வர முடியாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பேர்வழிக்குத்தான் பாஜக, நாட்டின் உயர்ந்த பட்ச விருதினை வழங்கிட விரும்புகிறது. அதுவும் எப்போது? மோடி அரசாங்கம், அதிகாரபூர்வமாக காந்திஜியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் சமயத்தில், இவ்வாறு செய்ய முன்வந்திருக்கிறது. இதன் சமிக்ஞை மிகவும் தெளிவு. வி.டி. சாவர்கரை மகாத்மா காந்திக்கு இணையாக வைத்திட இவர்கள் விரும்புகிறார்கள் என்பதேயாகும்.

சங்பரிவாரக் கும்பல் சாவர்க்கர் போன்ற மத வெறியர்களை உயர்த்திப்பிடித்திட மூர்க்கத்தனமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அதே சமயத்தில், இத்தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியோ எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. டாக்டர் மன்மோகன்சிங் மிகவும் பலவீனமானமுறையில், “நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் ஜிக்கு எதிரானவர்கள் இல்லை, ஆனாலும் நாங்கள் இந்துத்துவா சித்தாந்தத்திற்கு ஆதரவாக இல்லை,” என்று கூறியிருக்கிறார்.  அவர், ‘பாரத ரத்னா’ விருது வழங்குவது தொடர்பாகக் கூறுகையில், இது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு தீர்மானிக்கும் விஷயம் என்று கூறி, கருத்து கூறுவதைத் தவிர்த்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங்க்வி, மேலும் ஒருபடி சென்று, கருத்து கூறியிருக்கிறார்.   அவர், சாவர்க்கரை,  “விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற மாபெரும் புத்திசாலி” என்றும், “நாட்டிற்காக சிறை சென்றவர்,” என்றும் கூறியிருக்கிறார். ஒரு மதவெறிப் பேர்வழி குறித்து இவ்வளவு பம்மி வாய்திறந்திருக்கும் போக்கு, மதச்சார்பற்ற குடியரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு மேலும் ஊக்கத்தையே அளித்திடும்.

சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ கொடுத்து கௌரவிப்பது என்பது காந்திஜி மற்றும் நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுக்கு தேவையற்ற அவமானகரமான ஒன்றாக இருந்திடும்.

-ச.வீரமணி

Comments are closed.