SDPI கட்சியின் முப்பெரும் விழா

0

SDPI கட்சியின் முப்பெரும் விழா

சாசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 11ம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா ஜூன் 21 அன்று சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி..வி. தினகரன் எம்.எல்.ஏ., கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர், முஹம்மது முபாரக்

தலைமையுரையில், ‘‘இந்திய திருநாட்டை எவ்வித ஆபத்தும் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அயராது உழைத்தவர்களின் நினைவாக விருதுகள் வழங்கப்படுகின்றன. மக்களையும் வளங்களையும் காக்க வேண்டும் என்ற சிந்தனையில் களமாடிக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு இவ்விருதுகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி வழங்கி இருக்கின்றது. மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. கூட்டணியை தகர்க்க வேண்டும் என்ற சதித்திட்டம் அரங்கேறியிருக்கிறது. தேர்தல் மட்டும் பாஜகவை எதிர்க்கும் களம் என்பது எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு இல்லை. வரும் காலங்களில் பாஜகவின் சதித்திட்டங்களை மதச்சார்ப்பின்மையை முன்னிறுத்தி தோற்கடிக்கும் களத்தில் பயணிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி தனது உரையில் ‘‘வெற்றி தோல்வி என்பது போராளிகளுக்கு ஒரு பொருட்டு அல்ல. ஆகையால் தோல்விகள் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தலைவர்களையும் தொண்டர்களையும் சோர்வடையச் செய்யாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மோடி அலையை இல்லாமல் செய்து விழிப்புணர்வை உருவாக்கிய மே 17, எஸ்.டி.பி.ஐ. தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட போராட்ட இயக்கங்களுக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளன. பாஜக வெற்றிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி அமமுக கூட்டணி முக்கிய காரணமாக அமைந்துவிடும் என்ற பொய் பரப்புரை தோல்வியை தழுவியது. பாஜகவின் ஙி tமீணீனீ எஸ்.டி.பி.ஐ.- அமமுக கூட்டணி என்ற சொல் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்பட்டது. யாருக்கு எதிராக பேசுகிறோம் என்ற புரிதல் இல்லாமல் பரப்பப்பட்ட அவதூறு இன்று உடைத்தெறியப்பட்டது’’ என்று குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தனது உரையில், “சாதி, மத, மொழியால் மக்களை பிளவுபடுத்தி ஒரு வெற்றியை பெற்றுள்ள பாஜகவை தேர்தல் அரசியலை கடந்து எதிர்கொள்ள வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. 17வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2014 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட்ட பாஜகவுக்கு கிடைத்த தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 4765, இந்த தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 7707 தபால் வாக்குகளை பெற்றுள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் 2014ல் பதிவான தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 2320. தற்போது 15465 வாக்குகள் பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் திட்டமிட்டு நியமிக்கப்படுவதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ.தனது உரையில்,  ‘‘தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாதுகாப்பிற்காக நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செயல்படும் நண்பர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றைக்கும் துணை நிற்கும். மதவாதம் தலைத்தூக்க விடாமல் சாதி – மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துதரப்பு மக்களும் எல்லா துறைகளிலும் முன்னேற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணிச்சலுடன் போராடும்’’ என்றார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். விருது பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசையும் 25,000 ரூபாய் ரொக்கத்தையும் மாநில தலைவர் வழங்கினார்.

Comments are closed.