எஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு

0

பத்திரிகை செய்தி

எஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணத்திற்கு காரணமான எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை! – பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் கடந்த 15.10.2014 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் செய்யது முகம்மது, எஸ்.பி.பட்டிணம் காவல்துறை சார்பு ஆய்வாளர்(SI) காளிதாஸ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இப்படுகொலையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் காளிதாஸ் என்பவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும், வழக்கை கொலை வழக்காக மாற்றி உடனே கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அப்போது தமிழக அரசுக்கு முன் வைத்தது.

மேலும் கடந்த 16.10.2014 அன்று வழக்கை சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவிற்கு மாற்ற வேண்டும், சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகம்மதுவின் உடலை துப்பாக்கிக் குண்டுகளை ஆய்வு செய்யக்கூடிய சிறப்பு மருத்துவர் (Ballistic Expert) களை கொண்டு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும், இச்சம்பவத்தின் ஆதாரங்கள் அழித்து விடப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை அவசர வழக்காக எடுத்து நீதியரசர் கிருபாகரன் அவர்களின் அமர்வில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வழக்கறிஞர் எஸ்.எம்.எ. ஜின்னா அவர்கள் வாதத்தை முன் வைத்தார். இந்நிலையில் அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பண்ணீர் செல்வம் அவர்கள் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி புலனாய்வு பிரிவிற்கு மாற்றியும், படுகொலை செய்யப்பட்ட செய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து CBCID விசாரணையில் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் செய்யது முகம்மதை உள்நோக்கத்துடன் கொலை செய்ததாக 2015 ஜூன் 15 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து எஸ்.ஐ காளிதாஸ் கைது செய்யப்பட்டு வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த வழக்கை செய்யது முகம்மது குடும்பத்தின் சார்பாக வழக்கறிஞர் எஸ்.எம்.எ. ஜின்னா அவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்திவந்தார்கள். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (14.11.2019) இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் அவர்கள் முன் வந்தது. இதில் சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும் இரண்டு இலட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்கள். மேலும் ரூபாய் இரண்டு இலட்சத்தையும் செய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கே கொடுக்கவும் தீர்ப்பளித்துள்ளார்கள்.

இந்த தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பதோடு நீதிக்கான போராட்டத்தில் முன்னின்று நடத்திய வழக்கறிஞர் எஸ்.எம்.எ. ஜின்னா அவர்கள் உட்பட அனைத்து வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறது. இந்த தீர்ப்பு தவறு செய்யக்கூடிய அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைந்திடும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் நம்பிக்கை தெரிவிக்கிறது.

மேலும் ஏற்கனவே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட செய்யது முகம்மதின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும், நிவாரணத்தொகையை 5 இலட்சத்திற்கும் அதிகமாக கொடுக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் எஸ்.ஐ காளிதாஸ் செய்யது முகம்மதுவை உள்நோக்கத்துடன் கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

A. முகைதீன் அப்துல் காதர்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.