கொரோனா பாதிப்பு: ஸ்டான்லி மருத்துவமனை அலட்சியம் -தமிழக அரசு நடவடிக்கை எடுக்க PFI வலியுறுத்தல்

0

ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியத்தால் அச்சத்திற்கு உள்ளாகியிருக்கும் கீழக்கரை மக்கள் : மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

கடந்த 16.03.2020 அன்று துபாயிலிருந்து சென்னை திரும்பிய கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்ட வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக 02.04.2020 அன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்துவிட்டார்.

உடல் நலக்குறைவு காரணமாக மரணித்துவிட்டதாக கூறி ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை குடும்பத்தாரிடம் எந்த அறிவுறுத்தலும் இல்லாமல் ஒப்படைத்தது. ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான கீழக்கரை கொண்டுவரப்பட்ட அவரது உடல் 03.04.2020 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் 05.04.2020 அன்று காலை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிபடுத்தப்பட்டதாக கூறி கீழக்கரை பகுதி முழுவதையும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகவும், மரணித்தவரின் குடும்பத்தார்கள் மற்றும் நல்லடக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி சென்றனர். இதனால் கீழக்கரை மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மரணித்துவிட்ட நபருக்கு நோய்தொற்று இருந்ததா? என்பதை உறுதிப்படுத்தாமல் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்று தெரிவித்து குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைத்து அடக்கம்செய்ய அனுமதித்த ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியப் போக்கினை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிப்பதோடு, மெத்தனப் போக்குடன் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா நோய் தொற்று அறிகுறியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகின்றது.

பரிசோதனை முடிவுகள் காலதாமதமின்றி விரைவாகவும், வெளிப்படையாகவும் அறிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வந்து கொண்டிருக்கும் சூழலில் பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிவிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிசோதனையில் உள்ள நபர் இறந்துவிட்டால் அவரது பரிசோதனை முடிவு வந்த பின்பே உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

Comments are closed.