ரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்

0

வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த எஸ்.பி.ஐ புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது குறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ”ராம் தேவ் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் 3 இயக்குநர்கள் நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா ஆகியோர் பல்வேறு வங்கிகளில் ரூ.411 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பித்துள்ளனர்.

ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனம் பாஸ்மதி அரிசியை மேற்கு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது. இதற்காக எஸ்பிஐ வங்கியில் ரூ.173 கோடி கடன் பெற்றிருந்தது. மேலும் கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கிகள் என மொத்தம் ரூ.411 கோடி கடன் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 3 மிகப்பெரிய அரிசி ஆலைகள், 8 அரிசி ஆலைகள் இயங்கிவந்தன. மேலும், சவுதி அரேபியா, துபாய் நாடுகளில் தங்கள் அலுவலகத்தையும் ராம் தேவ் நிறுவனம் செயல்படுத்தி வந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஹரியாணாவில் உள்ள ராம் தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை ஆய்வு செய்தன.

வங்கிகள் ஆய்வு செய்வதற்கு முன் தொழிலதிபர்கள் மூவரும் தங்கள் தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் அனைத்தையும் பலருக்கும் விற்பனை செய்து தங்களின் பேலன்ஸ் ஷீட்டில் அதைச் சரி செய்து போலியான கணக்குகளை வங்கியில் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த நிறுவனம் தொடர்பாக வங்கிகள் விசாரணையை முழுமையாக நடத்தியபின் 2020, பிப்ரவரி 25ஆம் தேதி எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “எஸ்பிஐ வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம் ராம் தேவ் நிறுவன இயக்குநர்கள் 3 பேர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ அமைப்பின் முதல் கட்ட விசாரணையில் கடன் பெற்றவர்கள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக எந்தவிதமான சோதனையும் இதுவரை சிபிஐ அந்த நிறுவனங்களில் நடத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வாருங்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் விசாரணைக்கு வராதபட்சத்தில் அடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரி தெரிவித்தனர்.

ஏற்கெனவே விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, போன்றோர் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியுள்ளனர்.

அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் சிபிஐ, அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டும் இன்னும் அழைத்துவர முடியவில்லை. அந்த வரிசையில் ராம் தேவ் நிறுவன இயக்குநர்களும் சேர்ந்துவிட்டார்கள்.

Comments are closed.