இந்திய நாட்டின் சட்டங்கள், நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கும், அதிகார வர்க்கத்தினர்களுக்கும் ஆதரவாக உள்ளது என உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
வீடியோ காப்ஃபிரன்ஸ் மூலம் பிரியாவிடை கொடுத்த நீதிபதி தீபக் குப்தா கூறியதாவது: நீதிபதிகள், நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளை கண்டு தப்பித்துக்கொள்ளாமல், நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்ய முன்வர வேண்டும்.
நம்முடைய சட்டங்களும், சட்ட அமைப்புகளும் பணக்காரர்களுக்கும் அதிகார வர்கத்தினர்களுக்கும் ஆதரவாக உள்ளது. பணக்காரர்களோ, அதிகார மிக்கவர்களோ சிறையிலிருந்தால் அவர் மீண்டும் மீண்டும் உயர் நீதிமன்றங்களை அணுகிவிடுவார். ஆனால் ஒரு ஏழை அவ்வாறாக முயற்சி செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஒரு பணக்காரர் பிணையில் இருந்தால், அவரது வழக்கினை தாமதப்படுத்தவும் அல்லது விசாரணையை தாமதப்படுத்தவும் அவர் உயர் நீதிமன்றங்களை அணுகுவார். நீதித்துறையின் ஒருமைப்பாடுகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆபத்தில் கொண்டு செல்ல கூடாது.
இந்த நெருக்கடி காலகட்டங்களில் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும். சமானிய மக்கள் வழக்கம் போல குரல் இல்லாதவர்களாக போகிறார்கள். சமானிய மக்களுக்காக யாரவது குரல் கொடுத்தால் அதனை நீதிமன்றம் கேட்க வேண்டும். சமானிய மக்களுக்காக வாயப்பு வழங்குங்கள். இவ்வாறு நீதிபதி தீபக் குப்தா தனது உரையில் கூறினார்.