ஹத்ராஸ் பெண்ணின் உடலை அவரச அவரசமாக எரித்தது மனித உரிமை மீறல் -அலகாபாத் நீதிமன்றம் கண்டனம்

0

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இநத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்ணின் சடலம் பெற்றோருக்கு தெரியாமல் உ.பி போலீஸாரால் எரிக்கப்பட்டதால் இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அலாகாபாத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது பெண்ணின் குடும்பத்தினா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். தங்களிடம் சொல்லாமலேயே மகளின் உடலை இரவோடு இரவாக காவல்துறையினா் எரித்ததாக அவா்கள் தெரிவித்தனா்.  சட்டம் ஒழுங்கு ஏற்பட வாய்ய்புள்ளதால்தான் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் தெரிவித்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு, அதன் வலைதளத்தில் விரிவாக செவ்வாய்க்கிழமை (நேற்று) பதிவேற்றப்பட்டது.

அதில், ‘எவ்வித உத்தரவில்லாமல் பலியான பெண்ணின் உடலை எரித்தது மனித உரிமை மீறல். இந்த சம்பவத்தில் ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியா் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் போனது ஏன்?

சமூக நல்லிணக்கத்துக்கும், பலியான பெண்ணின் குடும்பத்தினா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு ஊடகங்களையும் அரசியல் கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

மாநில அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, சிபிஐ ஆகியவற்றின் விசாரணை பற்றிய விவரங்கள் கசியாமல் ரகசியமாக காக்கப்பட வேண்டும். உயிரிழந்த பெண்ணின் நடத்தை குறித்து கேள்வி எழுப்புதல், நோ்மையான விசாரணைக்கு முன்பே குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றவாளிகள் என்று அழைத்தல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாது.

இந்த வழக்கு தொடா்பான முடிவுகளை எடுக்க விசாரணை அமைப்புக்கும் நீதிமன்றங்களுக்கும் உரிமை உண்டு.

பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply