அனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்

0

நம் தேசத்திற்கு எதிராக செயல்படுத்தப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளை, குறிப்பாக தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து நம் இந்தியா தேசத்தில் ஒருமைப்பாடு , இறையாண்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டி பல்வேறு சட்டங்கள் அந்தந்த சமயத்தில் நம் தேசத்தை ஆண்டு வந்த அரசுகளால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1967-ம் வருடம் ஏற்படுத்தப்பட்டது “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 1967)”.

இச்சட்டங்கள் அனைத்தும் “தேசப்பாதுகாப்பு ” என்ற ஒற்றைப் பதத்திற்கு ஏற்படுத்தப்பட்டது என கூறப்பட்டாலும் பெரும்பாலும் அரசியலமைப்பினை நிலைநாட்டிட, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தவறும் அரசுகளுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளை குறிவைக்க அரசுகள் இச்சட்டத்தினை பயன்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தற்பொழுது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைமையில் அமைந்துள்ள தேசியவாத கூட்டணியும் விதிவிலக்கல்ல. பா.ஜ.க அரசு ஒரு படி மேலே சென்று தனது இந்துத்துவ கொள்கையை நிலைநாட்டுவதற்காகவும், தனது மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் மக்களை அச்சுறுத்துவதற்காகவும் UAPA சட்டத்தினை பயன்படுத்தி வருகிறது.

குறிப்பாக தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ன் படி ஏற்படுத்தப்பட்டுள்ள “NIA”- ஏஜென்ஸியானது UAPA சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கொண்டதால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு UAPA சட்டப்பிவுகளில் வழக்கினை பதிவு செய்து ஜனநாயக சக்திகளை அச்சுறுத்துவதையும் திட்டமிட்டு அவர்களின் குரல்வளையை நசுக்க செயல்பட்டு வருவதையும் இயல்பாக காண முடிகிறது.

UAPA சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களை தொடர்ந்து 30 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பதோடு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 180 நாட்கள் அவகாசம் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் UAPA சட்டப்பரிவுகளின் கீழ் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் ஏராளம். இச்சட்டம் மக்களின் உரிமைக்காக போராடும் ஜனநாயக சக்திகளுக்கு எதிரான கருப்புச் சட்டமாகவே இன்றளவும் கையாளப்படுகிறது.

CAA சட்டத்திற்கு எதிராகப் போராடிய சஃபூரா ஜர்கார் என்ற ஆராய்ச்சி மாணவியை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் UAPA சட்டப்பரிவுகளின் கீழ் சிறைப்படுத்தியுள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. 1995-ம் வருடம் பின்வாங்கப்பட்ட தடா சட்டம் மற்றும் 2004 -ம் வருடம் பின்வாங்கப்பட்ட பொடா சட்டத்தின் முக்கியப் பிரிவுகள் 2008-ம் வருட திருத்தத்தின் மூலம் UAPA சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தடா மற்றும் பொடா சட்டங்கள் இந்திய தேசத்திலுள்ள ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் கையாளப்பட்டு வந்ததால் பல்வேறு கட்ட போராட்டங்களால் பின் வாங்கப்பட்ட நிலையில் அவற்றின் முக்கியப் பிரிவுகளை UAPA திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டன.

UAPA சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளை தேசிய புலானய்வு முகமையான NIA மத்திய அரசின் உத்திரவின் பேரில் விசாரணை செய்ய முடியும். மத்திய அரசு தான் நினைத்தால் குறிப்பிட்ட நபர்களின் மீது இச்சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து NIA ஏஜென்ஸியை பயன்படுத்தி விசாரணை என்ற பெயரில் யாரை குறிவைத்ததோ அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்க முடியும்.

டெல்லி, சஹ்தாரா மாவட்டம், ஜஃபராபாத் காவல்நிலைய குற்ற எண். 48/2020 வழக்கில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 147, 186, 188, 283, 353, 109 மற்றும் 34 ன் கீழ் குல் ஃபிஷா பாத்திமா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அவரது பிணை மனு சஹ்தாரா மாவட்ட பெருநகர நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு மேற்படி உத்திரவில் அவர் மீது மற்றொரு கு.எண்.59/2020வழக்கில் இ.த.சட்டம் பிரிவுகள் 302, 307, 353, 186,212, 427, 435, 436, 452, 454, 109, 114,147, 148, 124ஏ, 153ஏ மற்றும் பிரிவுகள் 3, 4 பொதுச்சொத்து சேதாரம் தடுப்புச் சட்டம் மற்றும் பிரிவுகள் 25, 27 ஆயுதங்கள் சட்டத்தின் கீழும், UAPA சட்டம் பிரிவுகள் 13, 16, 17, 18-ன் கீழும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி உத்தரவை எதிர்த்து சஹ்தாரா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு குற்ற எண்.48/2020 என்ற வழக்கில் மட்டும் பிணை பெற்றார். ஆனால் அவர் குற்ற எண். 59/2020-ல் நீதிமன்றக் காவலில் இருந்ததால் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நீதிமன்றக் காவலுக்குட்படுத்தி இருப்பதாகக் கூறியும் அவரை மீட்டுத்தரக் கோரியும் குல்பிஷா பாத்திமாவின் சகோதரர் ஆகில் குசைன் ஆட்கொணர்வு மனுவினை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கினை 22.06.2020 அன்று நீதிபதிகள் விபின் சிங், ராஜ்னித் பட்நாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. அந்த உத்திரவில் UAPA சட்டத்தில் பதிவு செய்யும் எல்லா வழக்குகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள NIA ஏஜென்ஸிதான் விசாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதத்தில் NIA முகமை எல்லா வழக்குகளையும் விசாரிக்க முடியாது என்றும் எந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்குத்தான் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வுத்திரவில் அரசு தரப்பின் வாதமும், நீதிபதிகளின் கருத்தும் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.பெரும்பாலும் UAPA சட்டத்தால் பதிவு செய்யப்படும் வழக்குகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள NIA ஏஜென்சிதான் விசாரிக்க வேண்டும் என்ற மாயத் தோற்றம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், UAPA சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை யார் விசாரிக்க முடியும் என்பதை அச்சட்டமே தெளிவு படுத்தியுள்ளது.

அச்சட்டத்தின் பிரிவு 43, வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆணையாளர் அதிகாரத்திற்கு கீழ் அல்லாத காவல்துறை அதிகாரி எவரும் விசாரிக்க அதிகாரம் வழங்கியுள்ளது. அச்சட்டத்தில் NIA ஏஜென்ஸிதான் விசாரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

NIA சட்டம், 2008 பிரிவு 6-ன் படி NIA ஏஜென்சியானது NIA சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அட்டவணை வழக்குகளாக இருந்தாலும் மத்திய அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது. எதார்த்தத்தில் இப்பிரிவு மத்திய அரசின் அதிகாரத்தை குறிப்பிட்டாலும் இப்பிரிவுதான் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.

இச்சூழ்நிலையில் குல்ஃபிஷா பாத்திமா என்பவருக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவினை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்திருந்தாலும், UAPA சட்டத்தில் பதிவு செய்யும் எல்லா வழக்குகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள NIA ஏஜென்ஸிதான் விசாரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என தனது உத்திரவில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. UAPA போன்ற கருப்புச் சட்டங்களால் மத்திய பா.ஜ.க அரசால் மனித உரிமை மீறல்கள் அரங்கேற்றப்பட்டு வரும் வேளையில் இது போன்ற நீதிமன்றத்தின் கருத்துகள் மனித உரிமை தளத்திலும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுககாக போராடிவரும் ஜனநாயக சக்திகளுக்கு சிறிய ஆறுதலாக இருக்கலாம்.

எதிர்வரும் காலங்களில் விசாரணை முறைகளில் கருப்புச் சட்டங்களின் பேரிலான மத்திய அரசின் தலையீடுகள் களைந்தால் மட்டுமே மாநில அரசின் உரிமைகளும், கடமைகளும் நிலைநிறுத்தப்பட்டு அரசியலமைப்பின் அடிப்படைக்கூறுகளும், மனித உரிமைகளும் காக்கப்படும்.

  • வழக்கறிஞர் ஜமீஷா

Comments are closed.