நாட்டிற்காக உயிரையே கொடுப்போம்! – தப்லீக் ஜமாத்

0

டிசம்பர் மாதம் சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்றானது பரவ தொடங்கி உலகத்தை அச்சத்தின் பிடியில் ஆழ்த்தியுள்ளது. நோய் தொற்று குறித்த எந்தவித விழிப்புணர்வும் மத்திய பாஜக அரசுக்கு இல்லை. இதற்காக மற்ற நாடுகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியா தோல்வியை தழுவியது.

கொரோனா நோய் தொற்று ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவதாக மருத்துவ உலகம் ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்டது. இதை கண்டுகொள்ளாத அரசு, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. அதில் ஒன்று,‘நமஸ்தே ட்ரம்ப்’. மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ம் குஜராத்தில் சந்தித்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க கொரோனா தொற்று குறித்த முன்னெச்சரிக்கையாக மருத்துவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை அரசு. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் இந்நோய் பரவ தொடங்கியது. இந்த சமயத்தில் தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை எப்படி கையாளுவது என்று  பிரதமர் மோடிக்குதெரியவில்லை. வழக்கம் போல் வகுப்புவாத சிந்தனை மோடிக்குகைகொடுத்து உதவியது. டெல்லியில் அரசின் அனுமதியுடன் நடந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பின் மாநாட்டின் மீது ஒட்டுமொத்த பலியையும் வாரி இறைத்தது.

கொரோனா வைரஸ் தொற்றை இந்தியாவில் முஸ்லிம்கள் பரப்புவதாக அதையே திரும்ப திரும்ப ஊடகங்கள் கூறின. இதனால் சமானிய மக்களின் பேசு பொருளாக தப்லீக் ஜமாஅத் மாறியது. சங்பரிவார்களின் வெறுப்பு பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் சிகிச்சைக்காக தானாக முன்வந்தனர். 14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தொற்று இல்லை என்பது உறுதியாகி அனைத்து நபர்களும் வீடு திரும்பினர்.

செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டர் அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாததால் சிகிச்சை முறையில் மருத்துவர்கள் மாற்றம் ஏற்படுத்தினர். அதன்படி வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த நபர்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக முஸ்லிம்கள் முன்வந்தனர்.

இந்நிலையில்  ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிளாஸ்மா கொடையாளரான தப்லீக் ஜமாத் உறுப்பினர் ஹஷ்முதீன் அன்சாரி கூறும்போது, ஒரு முஸ்லிமுடைய வாழ்வின் பிரதான நோக்கம் மனிதகுலத்திற்கு சேவை செய்து ஆகும். இதனைதான் இஸ்லாமும், நபி (ஸல்) அவர்களும் எங்களுக்கு கற்பித்துள்ளார்கள். நாங்கள் இந்த நாட்டிற்காக, சக மனிதர்களுக்காக எங்கள் உயிரை கொடுக்கவே தயாராக இருக்கின்றோம். இது வெறும் இரத்தம் தான். இப்போது போல எப்போதும் எங்களால் முடிந்த உதவியை செய்ய நாங்கள் தயாராக இருப்போம் என்றார்.

Comments are closed.