சிலருக்கு மட்டுமே நோய் தொற்று..ஒட்டுமொத்தமாக நாங்கள் காரணமா? தப்லீக் ஜமாத் தலைவர்

0
தப்லிக்  ஜமாஅத் தலைவரான மௌலானா சாத், தனது வழக்கறிஞர் மூலம் அளித்த பேட்டியில், அவர் காவல்துறையினருடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் மர்கஸ் கட்டிடத்தில் நடக்கவில்லை என்றும் கூறினார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டியில் இருந்து…
நீங்கள் அனுமதியின்றி இஜ்திமாவை ஏற்பாடு செய்தது உண்மையா? 
நிஜாமுதீன் மர்கஸில் நடைபெறும் சாதாரண அன்றாட நடவடிக்கைகள் மற்றும் மத நிகழ்ச்சிகளுடன் இஜ்திமாவை குழப்ப வேண்டாம். இஜ்திமா என்பது பொதுவாக ஒரு பெரிய சபை, இது திறந்த பொது இடங்களில் நடத்தப்படுகிறது. அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதிகள் பெறப்படுகின்றன.
நிஜாமுதீன் மர்கஸ் என்பது அடிப்படையில் பங்கலே வாலி என்ற பெயர் கொண்ட ஒரு மஸ்ஜித். இங்கு ஆண்டு முழுவதும் சாதாரண மத போதனைகள் தினசரி வழங்கப்படுகின்றன. ஒரு மஸ்ஜித் என்பதால், பிரசங்கங்களை செய்ய அனுமதி பெற அல்லது கட்டிடத்திற்குள் மதம் சார்ந்த சொற்பொழிவுகளை நடத்த அனுமதி பெற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
காவல்துறை  விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைக்கவில்லை  என்பது உண்மையா?
இது முற்றிலும் தவறானது. அதிகாரிகளுடன் ஒவ்வொரு விதத்திலும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் எப்போதும் கடைபிடித்து வருகிறோம்; இது எங்கள் நூறு ஆண்டு வரலாறு. விசாரணை அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்ற கேள்விக்கே இடமில்லை. இதுவரை டெல்லி போலீசாரிடமிருந்து எங்களுக்கு எந்த அறிவிப்புகள் வந்தாலும் அதற்கு முறையாக பதில் அளித்துள்ளோம்.
உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நான் சுய தனிமைப்படுத்தலில் இருந்தேன். காவல்துறையினருக்கு நான் இருக்கும் இடம் பற்றி உண்மையில் தெரியும். நாங்கள் சமூக ஊடகங்களின் வல்லுநர்கள் அல்லது ஒரு கதையை சித்தரிப்பதற்கான வல்லுநர்கள் அல்ல. எனவே இது அனைவரையும் சென்றடையவில்லை. ஆனால் நான் உடனடியாக தப்லீக் உறுப்பினர்களிடம் பேசினேன்.  அவர்கள் எங்கிருந்தாலும் காவல்துறைக்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறும் சுய தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி அல்லது கோவிட் சோதனை என அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினேன்.
ஜமாஅத்துக்கு கணக்கிடப்படாத வெளிநாட்டு நிதி வருகிறதா.? இது தொடர்பாக அமலாக்கத்துறை உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது. மர்க்கஸில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் இதுவரை நடக்கவில்லை என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதை நாங்கள் எப்போதும் அப்படியே வைத்திருப்போம். இது தொடர்பாக எங்களுக்கு எந்த அறிவிப்பும் இதுவரை கிடைக்கவில்லை; அத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊடகங்களில் மட்டுமே உள்ளன. இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் திருப்திகரமான விளக்கத்தை என்னால் வழங்க முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால், குற்றச்சாட்டு என்னவென்று நான் முதலில் அறிந்திருக்க வேண்டும்.
சில வெளிநாட்டு ஜமாஅதிகள் சுற்றுலா விசாக்களில் பயணம் செய்து வந்துள்ளதால் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மர்கஸ் ஏன் அதை நடக்க அனுமதித்தது?
பல தசாப்தங்களாக ஒரே மாதிரியான அனுமதியுடன்தான்  மக்கள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். அதிகாரிகள் இதை ஒருபோதும் ஒரு பிரச்சினையாக சுட்டிக்காட்டவில்லை. நிஜாமுதீன் மர்கஸில் வெளிநாட்டவர்கள் இருப்பதை நாங்கள் எப்போதும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்; இது பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. எனது சிந்தனைப் புரிதலில், இது விசா விதியை எப்படி மீறுவதாகும்  என்பதைக் காண நான் தவறிவிட்டேன். மர்கஸ் எந்த வெளிநாட்டினரையும் அழைக்கவில்லை அல்லது வெளிநாட்டினருக்கான எந்த விசாவிற்கும் நிதியுதவி செய்யவில்லை.
இந்தியாவில் நோய் பரவுவதற்கு மர்கஸ்தான் காரணமா?
ஒரு சில உறுப்பினர்களுக்கு  கோவிட் பாசிட்டிவ் என சோதனையில் வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் பெரும்பான்மையான தப்லீக் உறுப்பினர்களுக்கு சோதனையில் ‘நெகடிவ்’ என வந்துள்ளது. இதன் மூலம் மர்கஸை “நோய்க்கு பொறுப்பானதாக” ஆக்க முடியுமா.? இந்த கேள்வியை நீங்களே  கேட்டுக் கொள்ள வேண்டும் – இந்தியாவில் முதல் கோவிட் வழக்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? பிப்ரவரி பிற்பகுதியிலும், மார்ச் மாதத்திலும் எத்தனை இடங்களில்  மிகப் பெரிய கூட்டங்கள் நடைபெற்றன, அவை நோய்க்கு பொறுப்பேற்க முடியுமா?
கோவிட் பற்றி உங்களுக்குத் தெரியும்; நீங்கள் ஏன் நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை?
மார்ச் மாதத்தில் ஒரு முன் திட்டமிடப்பட்ட நிகழ்வு இருந்தது, இதற்காக பங்கேற்பாளர்கள் தொலைதூர இடங்களிலிருந்து வரத் தொடங்கினர். பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து மார்ச் நடுப்பகுதி வரை அனைத்தும் இயல்பாகவே நடந்து கொண்டிருந்தது. மக்கள்  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டவுடன், நாங்கள் திட்டத்தை நிறுத்திவிட்டு பங்கேற்பாளர்களை வெளியேற்றினோம்.
பல முஸ்லிம் தலைவர்கள் ஜமாஅத்தை தடை செய்ய கோரிக்கை வைத்துள்ளனரே..?
அத்தகைய கோரிக்கை பற்றி எனக்குத் தெரியாது. சில சந்தர்ப்பங்களில், கோவிட் -19 க்கு பாசிடிவ் என சோதிக்கப்பட்ட  நோயாளிகள், பின்னர் குணமடைந்த நிலையில், அவர்களின் பிளாஸ்மாவை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரிவித்ததை நான் அனைவருக்கும் கூற விரும்புகிறேன். வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்ட தப்லீக்கைச் சேர்ந்த எனது நண்பர்களை இந்த நோயை எதிர்த்துப் போராடும் எந்தவொரு சாதி அல்லது மதத்தை சார்ந்தவர்களுக்கும் தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழில்: அகமது யஹ்யா அய்யாஷ்
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

Comments are closed.