கோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்

0

கோவை டவுன் ஹாலில் என்.எச். சாலையில் உள்ள கோயில் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அருகே உள்ள கடையில் இருந்து பழைய டயர்களை எடுத்து வந்து கோயில் முன்பாக தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

இதேபோன்று அம்மாவட்டத்தில், ரயில் நிலையம் முன் உள்ள விநாயகர் கோயில் மற்றும் துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோயில்களின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் டயர்களை போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

முன்னதாக நேற்று முன்தினம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது பாரத் சேனா எனும் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் காவி சாயம் ஊற்றி, செருப்பு மாலை அணிவித்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

கோயில்களை சேதப்படுத்திதால், போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை 12 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கோவில்களுக்கு தீ வைத்ததாக சேலம் மாவட்டம் அரிசிப்பட்டியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இவ்வாறு செய்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் கஜேந்திரனை நீதிமனறத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கூறியிருப்பதாவது: “இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கவும் , கோவையில் பொது அமைதி, நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் கோவை மாநகர காவல்துறை இரும்புக்கரம் கொண்டு , இந்த சமூக விரோதிகள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வலியுறுத்திகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.