திருச்சி பள்ளிவாசலின் ஒருபகுதி இடிப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

0

திருச்சி திருவானைகோவிலில் நெடுஞ்சாலைத்துறையால் பள்ளிவாசலின் ஒருபகுதி இடிப்பு!

நீதிமன்ற தடை ஆணையை மீறி நிகழ்த்தப்பட்ட அராஜக போக்கிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி திருவானைக் கோவில் பகுதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் காவல்துறை உதவிடன் நெடுஞ்சாலைத் துறையினர் இன்று (அக்.12) காலை இடித்துத் தள்ளியுள்ளனர். நீதிமன்ற தடை ஆணையை மீறி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சாலையின் அருகே அமைந்துள்ள ஹஜ்ரத் சையத் மஸ்தான் அவுலியா பள்ளிவாசலின் முன்பகுதியை, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் இடிக்க திட்டமிட்டபோது, பள்ளிவாசலை இடிக்கும் திட்டத்திற்கு பள்ளிவாசல் தரப்பில் உரிய நீதிமன்ற தடை ஆணை பெறப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் காவல்துறையினரின் துணையுடன் இடித்துள்ளனர். அதோடு பள்ளிவாசல் இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளிவாசல் நிர்வாகிகளும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த அராஜக போக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இதே சாலையில் பள்ளிவாசலுக்கு அருகில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ள நிலையிலும், சிலரின் தூண்டுதல் காரணமாக பள்ளிவாசல் அவசர கதியில் இடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு நீதி கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இந்த விவகாரத்தில் முதல்வர் அவர்கள் தலையீடு செய்து, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் முன்பகுதியை உடனடியாக கட்டித்தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply