வன்முறை தூண்டிய டிரம்ப்: கணக்கை நிரந்தரமாக முடக்கி அதிரடி காட்டிய டிவிட்டர்

0

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு காரணமான டிரம்பை அமெரிக்க தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறை தொடர்பான வீடியோவை, சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டது.

மீண்டும் வன்முறை தொடர்பான வீடியோவை அவர் வெளியிட வாய்ப்பு இருப்பதால், டிரம்பின் டிவிட்டர் கணக்கு தற்போது நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதால் தான் டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments are closed.