UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்?

1

UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்?

ஆதார் பாதுகாப்பு குறித்து பல விவாதங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் வேலையில் தற்போது புதியதொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. பொதுமக்கள் பலரது மொபைல் போனில் UIDAI இன் அவசர உதவி அழைப்பு எண் ஒன்று மக்களுக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை குறித்து முதலில் கேள்வி எழுப்பிய பிரபல ஃபிரெஞ்சு ஹாக்கர் எலியாட் அல்டர்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில் அவர் UIDAI-வை குறிப்பிட்டு, ஆதார் கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்களது செல் பேசியில் mAadhaar செயலியை நிறுவியிருந்தாலும் இல்லாவிட்டாலும் UIDAI இன் அவசர உதவை அழைப்பு எண் பொதுமக்கள் பெரும்பாலானோரின் மொபைல் போன்களில் அவர்களுக்கு தெரியாமலேயே எப்படி பதிவாகியுள்ளது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து பலரும் தங்கள் மொபைல் போன்களை சோதித்து பார்க்கையில் தங்களின் மொபைலில் அந்த எண் பதிவாகியிருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொபைல்களில் UIDAI இன் எண் எப்படி வந்தது என்றும் அப்படியானால் தங்களது மொபைல் வேறெவரது கட்டுப்பாட்டிலும் இருக்கிறதா என்ற குழப்பமும் மக்களிடையே அதிகரித்த நிலையில் கூகிள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகிள் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்த தங்களது அறிக்கையில், “2014 ஆம் ஆண்டு தங்களது நிறுவனம் கவனக்குறைவாக UIDAI அவசர உதவை அழைப்பு எண்ணையும் 112 அவசர அழைப்பு எண்ணையும் இந்தியாவிற்கு தயாரிக்கப்படும் மொபைல் போன் நிறுவனங்களின் SetUp File-களில் சேர்த்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் கவனக்குறைவிற்கு தாங்கள் வருந்துவதாகவும் குறிப்பிட்ட எண் தங்களது அலைபேசியில் இருப்பதால் அது வேறெவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.

ஆனால் கூகிளின் இந்த அறிக்கைக்கு பின்னர் தான் மேலும் குழப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கின. @an_a_nd என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கும் ஒருவர், தான் தனது அலைபேசியை அமெரிக்காவில் வாங்கியதாகவும் சில மாதங்களுக்கு முன் இந்தியாவிற்கு வந்த தனது அலைபேசியில் எப்படி 2014 இல் கூகிள் பதிவு செய்த எண் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூகிள் கூறுவது போல் இந்தியாவிற்கான மொபைல்களில் மட்டும் தான் இந்த எண் பதிவேற்றம் செய்யப்பட்டது என்றாள் அமெரிக்காவில் வாங்கி பயன்படுத்திய தனது அலைபேசியில் UIDAI இன் அவசர அழைப்பு எண் எப்படி வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


@DearthOfSid என்ற நபர், 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 112 அவசர அழைப்பு எண் கூகிள் 2014 OS பதிப்பில் எப்படி தவறுதலாக இடம் பெற்றிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். @deepshah91 என்பவர், கூகிள் கூறும் இந்த தவறு 2014 மே மாதத்திற்கு முன்பு நடந்ததா அல்லது மே மாதத்திற்கு பின்பு நடந்ததா என்று கேலி செய்துள்ளார். இன்னும் சிலர் வரலாற்றிலேயே குழப்பமான ஆண்டாக 2014 மாறியுள்ளது என்று கேலி செய்துள்ளனர்.

இன்னும், ஆதாரின் கண்காணிப்பு முறைகளில் கூகிலும் ஒரு அங்கமாக செயல்படுகிறதா என்று சுந்தர் பிச்சை விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் கூகிள் சங்கிகளுடன் இணைந்து கொண்டதா என்ற கேள்விகளும் டிவிட்டரில் எழுந்துள்ளது.

பெரும்பாலான பயனாளர்கள் கூகிள் கூறிய “கவனக்குறைவாக” என்ற காரணத்தை ஏற்கவில்லை. அப்படி கவனக்குறைவாக இது நடக்க கூகிள் என்ன மூன்றாம் தர நிறுவனமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் @raviinin என்பவர் UIDAI அவசர அழைப்பு எண் தவிர வேறெந்தெந்த அரசு கண்காணிப்பு மென்பொருளை ஆண்டுராய்டு இந்திய பதிப்பில் இணைத்துள்ளீர்கள் என்றும் கூகிளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.


கூகிள் மேலான விமர்சனங்கள் இப்படியிருக்க @mickeymandela என்பவரோ, இந்த அவசர அழைப்பு எண் ஏன் பேடிஎம் செயலில் இருந்து பதிவிறக்கப்பட்டதாக தனது மொபைலில் காண்பிக்கப்படுகிறது என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


இந்நிலையில் இந்த அவசர அழைப்பு எண் குறித்து கருத்து தெரிவித்த UIDAI குறிப்பிட்ட இந்த 1800-300-1947 அவசர அழைப்பு எண் காலாவதியானது என்றும் இன்னும் UIDAI என்றும் எந்த ஒரு நிறுவனத்திடமோ அல்லது தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ தங்களின் அவசர உதவி அழைப்பு எண்ணை தொடர்பு பட்டியலில் சேர்க்கும் படி அறிவுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ ஆதார் அவசர உதவி அழைப்பு எண் 1947 தான் என்றும் இது கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்றும் UIDAI தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் @MajChowdhury என்பவரும் @NeedhiMurasu என்பவரும் தங்களது ட்விட்டர் பதிவில், அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு UIDAI இன் எண்ணை இணைக்க கோரும் உத்தரவு படிவத்தை பகிருந்துள்ளனர். தற்போது ஆதாரின் ஆயிரம் குழப்பங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடித்துள்ளது.

Discussion1 Comment