சாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து

0

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் சித்தரவதை செய்தனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் காவல்துறையினர் அடித்தே கொலை செய்தனர்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.நா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்ஸின் செய்தித் தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கூறுகையில், “ஒவ்வொரு மரணமும் சட்டத்திற்கு உட்பட்டு முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து அடித்தனர். இதில் மூச்சித் திணறல் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் போலீஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும், கறுப்பின மக்கள் மீதான் அடக்கு முறைக்கு எதிராகவும் வலிமையான குரல் கொடுக்க காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் சாத்தான் குளம் விவகாரம் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.