மோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்

0

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம், 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மோடியின் 70வது பிறந்தநாளை வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து, இளைஞர்கள் பிரதமருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? தனியார்மயமாக்கல் ஏன்? என #NationalUnemploymentDay என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினர்.

டெல்லி, விண்ட்சர் பிளேஸில் உள்ள என்.எஸ்.யு.ஐ அலுவலகத்திற்கு வெளியே வேலையில்லா பட்டதாரிகள, டீ கடை அமைத்து அதில் பக்கோடா மற்றும் டீ விற்று மோடியின் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதுகுறித்து பக்கோடா விற்ற சிலர் கூறுகையில், “இந்த போராட்டத்தின் மூலம் யாரையும் கேலி செய்ய நாங்கள் விரும்பவில்லை. மோடி கூறியதை நாங்கள் செய்தோம்” என்று தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் கூட்டத் தொடருக்கு முன்னதாக மோடி அளித்த பேட்டி ஒன்றில் “பக்கோடா விற்பது கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாகும்” என்று கூறினார். இது பட்டதாரி மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று அவரது பிறந்தநாளில் பக்கோடா விற்று வேலையற்று இருப்பதை வெளிகாட்டியுள்ளனர்.

Comments are closed.