“நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?” -சித்திக் காப்பான் குடும்பத்தினர் கேள்வி

0

ஹத்ராஸ் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பனை அக்டோபர் 5 அன்று உ.பி.காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருடன் செய்தி சேகரிக்க வந்த சக ஊழியர்களான அதிக் உர்-ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக் காப்பானின் லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தற்கொலை தூண்டுதலுக்கு காரணமான வழக்கில் கைதாகி ஒரே வாரத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால் 40 நாட்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு இதுவரை ஜாமீன் கூட வழங்கவில்லை.

“நீதித்துறை எங்களை கைவிட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். நீதி அனைவருக்கும் சமமாக வழங்கப்படவில்லை. நீதி என்பது அனைவருக்கும் இல்லை, சிலருக்கு மட்டுமே. அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு மட்டும்  எப்படி வேகமாக செயல்பட்டது? அர்னாபிற்கு ஜாமீன் கிடைத்தது தெரிந்த பின்பு, என்னுடைய கணவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. கைதுக்கு பிறகு நீதிமன்றம் மற்றும் சிறை அதிகாரிகள் அவரை பார்க்க கூட எங்களை அனுமதிக்கவில்லை. அவர் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் நீதிமன்றம் முதல் அரசின் பல்வேறு துறஒய்களில் இருக்கும் அதிகாரிகளை சந்தித்துவிட்டோம் ஆனால் எங்களுக்கு நீதி இதுவரை கிடைக்கவில்லை. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா” என்று சித்திக் கப்பன் மனைவி ரைஹானா கேள்வி எழுப்பபினார்.

சித்திக் காப்பான் 9 வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். கேரள தளமாக கொண்டு செயல்படும் செய்தி நிறுவனங்களுக்கு பணியாற்றி வருகிறார். மேலும் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரே நபராக அவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளா யூனியன் ஆஃப் வொர்க்கிங் ஜேர்னலிஸ்ட்ஸின் டெல்லி பிரிவு செயலாளராகவும் சித்திக் உள்ளார்.

அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஹத்ராஸிற்கு செல்ல என் கணவரிடம் பணம் இல்லை. அங்கே செல்லும் யாரையாவது தெரிந்தால் தெரியப்படுத்தவும் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அதோடுதான் அவர்களுடன் ஹத்ராஸிற்கு பயணம் செய்தார். சித்திக்கின் 90 வயது தாயாருக்கு கைது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் டெல்லியில் இருக்கிறார் மிக விரைவாக வீடு திரும்புவார் என்று கூறியுள்ளோம். சித்திக் பற்றி அவர் கேட்டாலும் இரவு போனில் பேசியதாக பொய் கூறி வருகிறோம் என்று கூறுகிறார் அவரது மனைவி.

கடந்த வாரம், ரைஹானா தனது கணவருக்காக கேரள முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க டெல்லியில் உள்ள மாநில ஆணையருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாக ரைஹானா தெரிவித்தார்.

தனது கணவரை வெளியில் கொண்டுவர பல்வேறு கட்சி அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதாக தெரிவித்துள்ள ரைஹானா. நான் பல கட்சி தலைவர்களை சந்தித்தேன். அவர்கள் எனக்கு உதவினார்கள். ஆனால் இந்த வழக்கு உத்தர பிரதேசத்தில் இருப்பதால் அவர்களால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நான் உடைந்து போயுள்ளேன். ஆனால் எங்களுடைய மூன்று குழந்தைகளுக்காக நான் போராடியாக வேண்டும் என்றார்.

நீதிமன்ற பதிவுகளின்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், மற்றும் ஐபிசி பிரிவுகள் 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ ( மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295-ஏ (மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) போன்ற வழக்குகள் அவர்கள் மீது  பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மதுரா நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் இந்த 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.