உ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை

0

உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் நுழைவு கட்டணமாக ரூ.4 ஆயிரம் இல்லாத காரணத்தால் சுல்தான் கான் என்ற நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் அடித்து கொலை செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் தொடர்ச்சியாக அதிர்ச்சியான சம்பவங்கள் அறங்கேறி வருகின்றது. 8 போலீசார் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ரூ.4000 கட்டணம் வைத்தில்லாததால் நோயாளியை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுல்தான்கான் (44) என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று கடுமையான வயிற்று வலியால் வந்தார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.4,000 கட்டணம் செலுத்த வேண்டு என்றனர். அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என சுல்தான் குடும்பத்தினர் கூறிய பின், வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகள் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர் செலுத்தினர். ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால், அதன் அனுமதி கட்டணமாக ரூ.4,000 செலுத்தியே தீர வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் மிரட்டினர்.

அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று மீண்டும் சுல்தான் குடும்பத்தினர் கூறினர். இதனால், மருத்துவமனை ஊழியர்கள் ஆத்திரமடைந்து, சுல்தானை தடியால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த சுல்தான் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையிடம் சிசிடிவி ஆதாரத்துடன், சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.