உ.பி-யில் தொடரும் கொடூரம்: சிறுநீர் குடிக்க சொல்லி முதியவர் மீது தாக்குதல்

0

உத்தர பிரதேசத்தில் புகாரை வாபஸ் பெற சொல்லி 65 வயதான முதியவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லாலிட்புர் ரோடா என்னும் கிராமத்தில் வசித்து வரும் 65 வயதான முதியவர் அமர். அதே பகுதியை சேர்ந்த சோனு யாதவ் என்பவர் ஒரு கோப்பையில் சிறுநீர் வைத்து அதனை குடிக்குமாறு முதியவரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு முதியவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை சரமரியாக அந்த நபர் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த முதியவரின் மகனையும், கோடாரியால் பலமாக அடித்துள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முதியவரும் அவரது மகனும் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சோனு யாதவ் மீது புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட முதியவர் கடந்த வாரம் யாதவ் மீது புகார் அளித்ததாகவும் அந்த புகாரை வாபஸ் பெறக்கோரி மீண்டும் தாக்கியதாகவும் முதியவர் தெரிவித்துள்ளார்.

தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த முதியவர் இவ்வாறு கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே உ.பியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடூரம் தொடர்ந்து அரங்கேறி வரும் சூநிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் துன்புறுத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரை தேடி வருவதாகவும் லாலித்புர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Leave A Reply