உ.பி-யில் லிஃப்ட் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்

0

உத்தர பிரதேசத்தில் லிப்ட் கேட்பது போல் நடித்து கார் டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் சகோதரர்களான இருவர் தங்களது காரில் நொய்டாவிலிருந்து புலந்த்ஷாருக்கு சென்றுள்ளனர். அப்போது தலைமை காவலராக பணியாற்றிவரும் ஓம்பீர் பாட்டி என்பவர் அவர்களது காரில் ‘லிஃப்ட்’ கேட்டு ஏறியுள்ளார்.

கார் சென்று கொண்டிருக்கையில் ஓம்பீர் பாட்டி தனது துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் இருந்தவர்களிடம் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓம்பீர் பாட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கிரேட்டர் நொய்டாவின் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.

இச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆண்டு மே மாதம் முதல் உள்ள நிலவரப்படி பொதுமக்களை தாக்கியதாக 12 போலீசார் கைது மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.