பிளவுபடுத்தும் வேல் யாத்திரை: பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை!

0

வேல் யாத்திரைக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு யாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. யாத்திரையை வழிபடும் நோக்கோடு நடத்தாமல், அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என அதற்கு டிஜிபி தரப்பும் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், வேல் யாத்திரையை அரசியல் ரீதியில் முடக்குவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் “நமது புரட்சித் தலைவி அம்மா” நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது.

குத்தீட்டி என்ற புனைப்பெயரில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், “சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகம் ஆமோதிக்காது. ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்துக்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மதத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இப்படி, மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அ.தி.மு.க அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும். அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி” என்று வேல் யாத்திரையை கடுமையாக சாடியுள்ளது அதிமுகவின் நாளிதழ்.

Comments are closed.