இக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா

0

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு துவக்கத்திலிருந்தே மோடி அரசை பல எதிர்கட்சியினரும், அறிஞர்களும் விமர்த்து வருகின்றனர். அதுபோல பாஜக அரசை மம்தா பானர்ஜியும் விமர்சனம் செய்து வருகிறார்.

சமீபத்தில் உம்ஃபன் புயல் மேற்கு வங்க மாநிலத்தை தாக்கியது. இந்நிலையில் பாதிப்புகளுக்கு உதவாமல் மேற்கு வங்க மாநில அரசின் கொரோனா நடவடிக்கையில் சிக்கல்கள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஆனால் அந்த கடிதத்திற்கு மேற்கு வங்க அரசு பதில் அளிப்பதற்குள் உள்துறை அமைச்சகம் கடிதத்தை பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தியதால் அம்மாநில முதல்வர் மம்தா கோபமடைந்தார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்திற்கு தொடர்ந்து மத்திய குழு அனுப்பப்படுகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என நினைத்தால், இந்த கொரோனா நெருக்கடியை ஏன் பாஜக அரசே கையாளாக்கூடாது? அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என நான் அமித்ஷாவிடம் கூறினேன்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு இதனை நான் அமித்ஷாவிடம் தெரிவிக்கிறேன். நீங்கள்தான் ஊரடங்கை அமல்படுத்தினீர்கள். ஆனால் தற்போது ரயில், விமானங்கள் இயங்குகின்றன. இதனால் மக்களின் நினை என்ன ஆகும்? நான் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

தயவுசெய்து கொரோனா பரவுவதை பாருங்கள். ஏற்கெனவே 1 லட்சம் பாதிப்பை கடந்துவிட்டது. இந்த சூழலில் மேலும், அரசியல் லாபத்திற்காக இன்னும் சில இடங்களில் பரவவேண்டும் என நினைக்கிறீர்கள். பீகார் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. இச்சூழலில் எங்களால் என்ன செய்யமுடியும். மோடி இந்த பேரழிவு நேரத்தில் தலையிடவேண்டும் என விரும்புகிறேன்.

மேற்குவங்கத்தை அரசியல் ரீதியாக அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். கொரோனா பரவல், புயல் பாதிப்பு ஆகியவற்றை நாங்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இதற்கிடையே, வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பை, பீகார் போன்ற பகுதிகளில் ரயில்கள் மூலம் தொழிலாளர்களை மேற்கு வங்கத்திற்கு அனுப்புகிறார்கள்.

ரயில் இயக்கப்படுவது தொடர்பாக பாஜக அரசு, ரயில்வே நிர்வாகமோ எங்களிடம் அனுமதி கேட்காமல் மேற்கு வங்கத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இது மத்திய பாஜக அரசுக்கு தெரியவில்லையா? அரசியல் நோக்குடன் அவர்களுக்கு வசதியானதை பலவந்தமாக செய்கிறார்கள்” என மம்தா தெரிவித்துள்ளார்.

Comments are closed.