யோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன?

0

யோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை அறிக்கை என்ன சொல்கிறது..?

அண்மையில் உ.பி யில் நடந்த CAA க்கு எதிரான போராட்டங்களில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்று அவசர அவசரமாக 300க்கும் மேற்பட்டோருக்கு எதிராக உ.பி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் யோகி ஆதித்யநாத்தின் மீதும் அவரது அமைப்பான ஹிந்து யுவ வாகினியின் மீதும் நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னமும் நிலுவையில் தான் உள்ளன.

போராடும் மக்களின் மீதான வழக்குகளை விட உத்திர பிரதேச உளவுத்துறை ஹிந்து யுவ வாஹினிக்கு எதிராக பெரிய குற்றசாட்டுகளை முன்வைத்ததை குறித்து உ.பி காவல்துறையிடம் நேரடியாக அணுகியுள்ளேன்.

கோத்ராவின் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் எரிப்புக்கு பழிவாங்குவதற்காக உபியில் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு தான் ஹிந்து யுவ வாஹினி. உளவுத்துறை ஹிந்து யுவ வாஹினி குறித்து தங்களது ரகசிய அறிக்கையில் கூறியிருப்பதாவது.. “ஹிந்து யுவ வாஹினி என்பது வெறித்தனமான மற்றும் போர்குணம் மிக்க அமைப்பு. அது மிகச்சிறிய இந்து முஸ்லிம் சண்டைகளை கூட பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினைகளாக மாற்றக் கூடியது. மேலும் இந்து மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் அமைப்பு” என்கின்றனர். கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலுக்கு அருகாமையில் இவர்கள் செயல்படுவதால் காவல்துறை நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அந்த கோயிலின் தலைமை பூசாரியே தற்போதைய உபி யின் முதல்வரான யோகி தான்.

கடந்த 12 ஆண்டுகளில் ஹிந்து யுவ வாஹினியின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து காவல்துறையின் அதிகாரிகள் தயாரித்த வருடாந்திர அறிக்கை மிக முக்கியமானது.
பல ஆண்டுகளாக கிழக்கு உத்திர பிரதேசத்தில் இந்த அமைப்பின் நகர்வுகளை காவல்துறையின் அறிக்கை ஆவணப்படுத்துகிறது. மேலும் இதில் ஆதித்யநாத்தை எதிர்கொள்ளும் போது உபி காவல்துறையின் கையாளாகாத தன்மை குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. உபி யின் உள்ளூர் எம்பியாக இருக்கும்போதே அவரால் தனது அரசியல் நோக்கங்களுக்காக காவல்துறையை பயன்படுத்த முடியுமெனில் முதல்வராக இருக்கும்போது அவரது அமைப்பிற்கு எதிராக காவல்துறை தயாரித்த அறிக்கைகளை அவரிடம் சமர்ப்பிக்கும் நிலையினை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பணிரெண்டு ஆண்டுகள் தயாரித்த அறிக்கையின் முக்கியமான குறிப்புகள் வருடாந்திர அடிப்படையில் கீழே தொகுத்துள்ளேன்.

ஆதித்யாநாத்தின் ஆசீர்வாதம் :

2003 : வெளியான இந்த அறிக்கை ஹிந்து யுவ வாஹினியின் விரைவான வளர்ச்சியை அடிக் கோடிட்டு காட்டுகிறது. ஹிந்து யுவ வாஹினியின் நடவடிக்கைகள் நிர்வாகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பொறுமையை சோதிப்பதாகவே இருந்தன.

ஏப்ரல் 2014: காவல்துறை அதிகாரி ஹிந்து யுவ வாஹினியின் வரலாற்றை சுருக்கமாக எழுதினார். அதில் ” 1998ம் ஆண்டு தேர்தல் யோகி ஆதித்யநாத்தின் போட்டியிட்ட முதல் வாக்கெடுப்பு அதில் குறைந்த வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். கோரக்நாத் கோயிலிலால் முன்மொழியப்பட்ட வேட்பாளருக்கு இந்து ஆதரவு வாக்குகள் பெரும்பான்மையாக விழும் என்பது தெளிவானது. இந்து வாக்கு வங்கி அரசியல் இல்லாமல் யோகி வெற்றி என்பது சாத்தியமற்றது. இந்த நோக்கத்திற்காகத்தான் யோகி இந்து வாக்கு வங்கி அரசியலை முயற்சித்தார். எனவே அவர் 2002ம் ஆண்டில் ஹிந்து யுவ வாஹினியை தொடங்கினார். பின்னர் விராட் விஸ்வ இந்து சங்கத்தை ஏற்பாடு செய்தார். பின்னர் யோகி மற்றும் அவரது ஹிந்து யுவ வாஹினி இல்லாமல் இந்துக்களின் வாழ்க்கை, சொத்து, கௌரவத்தை பாதுகாக்க முடியாது என்பதை நிறுவ முயன்றார். இதன் விளைவாக இந்து சமூகம் அவரை பின்தொடர தொடங்கியது. இதன் மூலம் ஊக்கம் பெற்ற அவர் கோரக்பூர் மண்டலத்தின் குஷினகர், தியோரியா மற்றும் மகாராஜ்கஞ்ச் மாவட்டங்களிலும், பஸ்தி மண்டலத்தின் பஸ்தி, சாந்த் கபீர் நகர் மற்றும் சித்தார்த்நகர் மாவட்டங்களிலும் ஹிந்து யுவ வாஹினியை நிறுவினார். இதில் மிக அதிகமாக கல்வியறிவற்ற இந்து இளைஞர்கள் இணைந்துள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் நோக்கம் இந்து உணர்வை கூர்தீட்டுவதன் மூலம் அரசியல் ஆதாயங்களை பெறுவதாகும்.

2008 : ஹிந்து யுவ வாஹினியின் தீவிர உறுப்பினர்கள் சாதாரண சிறிய இந்து முஸ்லிம் தகராறுகளைக் கூட தர்ணாக்களை நடத்திய பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினைகளாக மாற்றுகின்றனர்.

2012 : ஹிந்து யுவ வாஹினியின் பாதுகாவலரான யோகி ஆதித்யநாத் ஒரு வெறிபிடித்த இந்துத் தலைவர், மற்றும் அவர் உருவாக்கிய அமைப்பு ஒரு தீவிர வெறிபிடித்த அமைப்பு. அதன் தீவிர உறுப்பினர்கள் இயல்பாகவே அரசு நிர்வாகத்தின் முன் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே அவர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு தேவை.

அரசியல் ஆதரவு :

2013 : இந்த அமைப்பின் உறுப்பினர்கள்,நிர்வாகிகள் இந்து-முஸ்லீம் மோதல்களை பெரிதுபடுத்துவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவறாமல் உருவாக்குகிறார்கள், எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து நிரந்தர சோதனை செய்ய வேண்டும்.

2014: விஷ்வ ஹிந்து பரிசத் (வி.எச்.பி), பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற இந்து அமைப்புகளின் அலுவலர்கள் ஹிந்து யுவ வாஹினியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். ஹிந்து யுவ வாஹினியின் உறுப்பினர்கள் இயல்பாகவே தீவிரமானவர்கள். இவர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சிறப்பு விசாரணை தேவை.

2015: ஹிந்து யுவ வாஹினி அமைப்புடன் தொடர்புடைய இளைஞர்கள் சிறிய இந்து-முஸ்லிம் தகராறுகளில் தலையிட்டு மோசமாக்குகிறார்கள். கோரக் பீத் ஆலயம் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் கிராம மட்டம் வரை ஹிந்து யுவ வாஹினி உறுப்பினர்கள் பரவுகின்றனர். இந்த அமைப்பை பற்றி அபிப்பிராயம் இளைஞர்களிடையே அதிகமாக வளர்ந்து வருகிறது. ஏனெனில் இந்த அமைப்பில் இணைந்தவுடன் அதன் உறுப்பினர்கள் காவல்துறையின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு அந்த அமைப்பில் இருப்பதனால் அரசு நிர்வாகத்திலிருந்து சில உதவிகளை பெற முடிகிறது. மோதல்களை பயன்படுத்தி இந்த அமைப்பு தங்களை வளர்த்து கொள்ள பார்க்கிறது.
மேலும் ஹிந்து யுவ வாஹினி குறித்த பல்வேறு சம்பங்களை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது.

இது போன்ற சுயாதீன புலனாய்வு அறிக்கைகள் உத்திர பிரதேச அரசு நிர்வாகத்திற்கு சில குறிப்பிடத்தக்க தகவல்களை வழங்கியிருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் பணியாற்றிய அதிகாரிகள் பொறுப்பற்ற ஆட்சி மற்றும் காவல்துறையின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும் , யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது தீவிர அமைப்பினர் குறித்தும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்ற விமர்சனத்தை எழுத்துப்பூர்வமாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஆவணத்தை அரசியல் நோக்கம் கொண்டதாக நிராகரிக்க முடியாது. அரசியல்வாதிகள் காவல்துறையின் வழக்குகளை தங்களது சுய லாபங்களுக்காக கேடயமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த காவல்துறையின் புலனாய்வு அறிக்கைகள் காவல்துறையின் வழக்குகள் குறித்து எதுவும் பேசவில்லை. தற்போதுள்ள காவல்துறையின் வழக்குகளை ஆதரிப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கவில்லை. கள ஆய்வின் அடிப்படையில் உள்ளூர் புலனாய்வு பிரிவுகளால் இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் காவல்துறையின் சிஐடி மற்றும் உளவுத்துறை அமைப்புகளிடமிருந்து விலகி தனித்தனியாக செயல்படுகின்றன.

Comments are closed.